Sunday, January 06, 2008

வாங்க..வாங்க..வாங்க!!

வாசகர்களே!!

வாங்க..வாங்க..வாங்க!!

அடிக்கடி வலைத்தளங்களுக்குப் போகமுடியாமல், சில வாரங்களாகவே பரீட்சை, ஆராய்ச்சி, வர்ணம் பூசுதல்னு மூழ்கி இருந்தேனா! போனவாரம் தான் தமிழ்மணத்துல கூப்பிட்டது 'வரப்போகும் வாரம்'ன்னு ஞானோதயம் வந்தது. தமிழ்மணம் நிர்வாகியின் ‘ஞாபகப்படுத்தும் மின்னஞ்சல்’ என்னவோ "அடுத்த வாரம் உங்க வீட்டு 'நவராத்திரி கொலு'வுக்கு நிறைய பேர் வரப்போறாங்க" ன்னு யாரோ 'போன்' பண்ணி 'ஆபீஸ் போகும் அம்மா' கிட்ட சொன்ன மாறி இருந்தது. முன் வாரமே பரபரப்பாகும் அம்மா மாதிரி நானும் என் 7 நாள் கொலுவை எப்படி வைக்கறதுன்னு ஒரே கவலை. ஆனா, எனக்கும் ஆபீஸ் (Research) என்னமோ இருந்தது.

வரப்போகும் மக்கள், முன்பு பார்த்த வீட்டயெல்லாம் (முந்தய நட்சத்திரங்கள் பதிவுகள) ஒரு எட்டு 'குடு குடு'ன்னு பார்த்துடு வந்தேன். மனசெல்லாம் கவலை.. ஏன்னா, என்கிட்ட என்னவோ கொஞ்சமா தான் பொம்மைகள் இருக்கு. என் தமிழறிவ பத்தி தாங்க சொல்றேன்.போதாக்குறைக்கு நான் வேற எங்க வீட்டுக்கு 'கொலு அகம்' ன்னு பேரு வெக்கற மாதிரி, 'தமிழ்க்கல்வி'ன்னு பெரிசா பேரு வேற வெச்சிருக்கேன். இதை தொடங்கும் போது யாருக்கு தெரியும், இப்படி பெரிய மனுஷங்க நீங்க எல்லாம் வரீங்கன்னு!

வாசகர்களே! 'தமிழ்க்கல்வி' ன்ற தலைப்ப பார்த்து ரொம்ப அதிகமா எதிர்பார்த்துடாதீங்க. தமிழார்வம் வளர்க்க தான் நான் முயற்சி செய்வேனே தவிர, தமிழ்மணத்துல உள்ள நிறைய தமிழறிஞர்களுக்கு இங்க தமிழ்க்கல்வி ஒண்ணும் புதுசா/ பெரிசா இல்லீங்க. நேரம் கிடக்கும் போது எல்லாம் நான் படிக்கும் சிலவற்றை வலைத்தளத்துக்கு ஏத்துவேங்க.. அவ்ளோ தான்!!

ஒரு வழியா அம்மாவாசை வந்துடுச்சு !! நானும் சுண்டல் சாமான் எல்லாம் எடுத்து ஊற போட்டுகிட்டே பேசறேன். கல்வி.. பாடம்..அப்படீன்னு எல்லாம் ரொம்ப யோசிக்காம ஒரு வாரம் தினம் வாங்க..சுமாரா சமைக்க முயற்சி பண்றேன்.. வந்து சந்தோஷமா சுண்டல் சாப்பிடுங்க. வீட்டுக்கு வரீங்க.. வரவங்க ' கொலு'வ மட்டுமா பாப்பீங்க.. 'முந்தய பதிவுகள்'ன்ற என் முழு வீட்டை நல்லா சுத்தி பாருங்க. நிறையா இடம் குப்பையா கிடந்தா கண்டுகாதீங்க. மாடில உள்ள எங்க பாட்டி வீட்டுலயும், பக்கத்துல உள்ள எங்க அத்தை வீட்டுலயும் எங்க சமையல் தான். அதுவும் எங்க வீடு தாங்க.. இந்த வீட்டுக்கு அப்புறம் அங்கயும் போய் கைய நனையுங்க..என் மத்த வலைத்தளங்கள தான் சொல்றேங்க..எதாவது ஒரு வீட்டுலயாவது உங்களுக்கு பிடிச்ச மாதிரி சாப்பாடு கிடைக்கும்னு நம்பறேன். சரி..இத்தனையும் வாசலில வெச்சே சொல்லி இருக்க வேண்டாம்.. இருந்தாலும்... அத விடுங்க...

வாங்க!! வாங்க!! வாங்க!! எப்படி!!!!! வீட்டுக்கு வரவங்கள கூப்பிடற மாறி கூப்பிட்டேனா !! :)-

மக்களே!! அண்மையில் திருப்பாவையில் ஒவ்வொரு பாடலையும் கற்று அதனை இணையத்தில் ஏற்றிக் கொண்டிருந்தேன். படிப்பின் காரணமாக தினமொரு பாடல் கற்க இயலவில்லை. பாதியில் நின்று கொண்டிருக்கின்றது. கவிதை மூலம் தமிழ் கற்பதை நோக்கமாகக் கொண்ட இத்தளத்திற்கு விருந்தாளிகள் தாங்கள் வந்திருப்பதனால், இந்த 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் தமிழ்க்கல்வியைத் தழுவி சில விஷயங்களை சின்ன பொட்டலங்களாகக் கட்டி ஒரு பதிவாய் இணையத்திலிட எண்ணியுள்ளேன்.

என்னென்ன பொட்டலங்களென பார்ப்போமா!!

1. சும்மா கதை கேளுங்க: ‘சிந்து பைரவி’ ஜனகராஜ் மாறி என்னைப் பேச விடவில்லைன்னா என் மண்டை சுழன்று, வெடிச்சுடும். அதனால முதல்ல நான் கொஞ்சம் கதை பேசறேன்.

2. இலக்கணம்-ஒரு கண்ணோட்டம்: நாம அனைவரும் பள்ளியில மனப்பாடம் செய்து இலக்கணம் பயின்றிருப்போம். ஆனா, நிறைய பேருக்கு இலக்கணத்த பார்த்தா ஒரு பயம். எனக்கு எளிய நடையில் அடிப்படையான இலக்கணத்தை சொல்லித்தர ரொம்ப ஆசை. "அதுக்கு நாங்க தான் கிடைச்சோமா"ன்னு கேக்காதீங்க!! ஆமாங்க..உண்மை அது தாங்க.. சும்மா படிச்சு பாருங்க!! உங்க குழந்தைகளுக்கு சொல்லித்தர உதவுமே!! உபயோகமா இருந்தால் நிச்சயமா சொல்லுங்க. குறையிருந்தாலும் சொல்லுங்க..நான் திருத்திக் கொள்கிறேன். கொடுமையா இருந்தாலும் சொல்லுங்க. நான் நிறுத்திக் கொள்கிறேன் :)-

3. தெரிந்தால் சொல்லுங்கள்: எனக்கு நிறைய தமிழ் சம்பந்தப்பட்ட கேள்விகள் இருக்கு. இவ்வளவு பேரை இங்கு பார்க்கும் போது விடை கேட்டு தெரிந்து கொள்ள ஆசை..பதில் சொல்லிட்டு போங்க..உங்களில் யாருக்காவது கேள்வி இருந்தாலும் சொல்லுங்க. நான் சேர்த்து பதிவு செய்யறேன்.

ஏழு நாளைக்குப் பிறகு சாவகாசமாய் திருப்பாவையைத் தொடரலாம்ன்னு
நினைக்கிறேன். என்ன.. 'வணக்கம் தமிழகம்' பார்க்கிற மாறி ஒரு எண்ணம் எனக்கே லேசா வருது... உங்களுக்கு எப்படி?? மறுமொழியீடுப் பகுதிக்கு வாங்க.. நம்ம பேசலாம்!

9 comments:

ஆயில்யன் said...

நட்சத்திர பதிவுகளில் சைவ தமிழ் காண காத்திருக்கிறேன்

வாழ்த்துக்களுடன்...!

குமரன் (Kumaran) said...

தமிழ்மண விண்மீனாய் ஆனதற்கு வாழ்த்துகள் ப்ரியா.

மணியன் said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள் !!

Maayaa said...

ஆயில்யன் அவர்களே,
நன்றி. நிச்சமாக முயற்சி செய்கிறேன்.

நன்றி குமரன் மற்றும் மணியன் அவர்களே

துளசி கோபால் said...

//ஏழு நாளைக்குப் பிறகு சாவகாசமாய் திருப்பாவையைத் தொடரலாம்ன்னு
நினைக்கிறேன்.//

ஆமாமாம்.....அப்பத்தான் மார்கழி கழிஞ்சு தை பொறந்துரும். தைய்யாத்தக்கான்னு குதிக்காம ஆற அமர 'கோதை'யை ரசிக்கலாம்:-))))

தமிழ் ரொம்பத்தெரியாது. அதனால் ஒரு ஓரமா வந்து உக்கார்ந்துருக்கேன்.

இலக்கணமெல்லாமாச் சொல்லித்தரப் போறிங்க?

பயமா இருக்கு:-))))

Maayaa said...

துளசி மேடம்..

இப்படி என்ன ஓட்டறீங்களே :)-

அது என்னவோ உண்மைதான். தை பொறந்துடும்.. நானும் ஒவ்வொரு வருஷமும் எப்படியாவது கத்துகிடனும்ன்னு பாக்கறேன். வேளை வரல...இப்போ விருந்தாளிகள் எல்லாம் வரச்சே திருப்பாவையையும், மத்த விஷயங்களையும் சேர்த்து கவனிக்க முடியல..ஹி ஹி..

இலக்கணத்த பார்த்து பயப்ப்டாதீங்க..நான் ரொம்ப கொடுமை படுத்தினா சொல்லுங்க..

cheena (சீனா) said...

நட்சத்திர நல்வாழ்த்துகள் - வருக வருக - தருக தருக தமிழமுதம் பருகப் பருக

Maayaa said...

வந்துட்டேன் சீனா அவர்களே!! வந்துட்டேன்!!

soorya said...

எனக்கு உங்கள் பதிவுகள் மிக நன்றாகப் பிடிச்சிருக்கு.
எனது புளக்கில் சும்மா வெறும் காதல் தோல்வியே இருக்கும்.
அங்கு போகாமல்...,
sooryavinothan@gmail.com
ஒரு மெயிலைப் போடுங்கள். எனது துணைவியார் காளமேகத்தாரில்தான் தனது பட்டப்படிப்பை புகழ் வாய்ந்த பல்கலைக்கழத்தில் நிறைவு செய்தார்.
நன்றி.