Saturday, January 12, 2008

நட்பும் நிறைவும், யாப்பும் அணியும் மற்றும் மின் அகராதி !!

என் அருமை மக்களே!!

நட்சத்திர வாரத்தின் கடைசி நாள்!! இவ்வளவு தமிழ் ஆர்வம் உள்ள மக்கள இங்க சந்திப்பேன்னு நான் எதிர்ப்பார்க்கல..இந்த வாரம், மனசுல ஒரு தனி நிறைவு தான் போங்க!! நிறைவுன்னா எனக்கு நினைவுக்கு வருபவர் பிசிராந்தையார் தான்.

சும்மா கதை ஒண்ணு கேளுங்க!!

பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் மானசீக தோழர்கள். ஒருத்தர பற்றி இன்னொருத்தர் கேள்விப்பட்டு ஒரு நட்பை மனசுல வளத்துகிட்டவங்க. ஒருத்தரோட பேர இன்னொருத்தரும் சேர்த்து எழுதும் அளவுக்கு அன்பு வளர்ந்தது.. உறையூரில் உள்ள கோப்பெருஞ்சோழனுக்கும் அவன் மகன்களுக்கும் சண்டை வந்ததால, சான்றோர்களின் அறிவுரையின் பேரால், நாட்டை அவர்களுக்கு விட்டுக் கொடுத்துட்டு உண்ணா நோன்பு இருந்து உயிர்விட எண்ணினான் சோழன். ஆனால், மானசீகமா, அதற்குள்ள பிசிராந்தையார் தன்னைப் பார்க்க வருவார்ன்னு நம்பினான்.

ஏதோ உள்ளுணர்வால, பிசிராந்தையாரும் உறையூருக்கு சோழன பார்க்க நடந்தார். 'தலை நரைக்கும் வயதாகியும் உங்களுக்கு நரைக்க வில்லையே'ன்னு உறையூர் மக்கள் கேட்டதற்கு (புறநானூறுல இருக்கு) அவர் சொன்ன பதில் இது.

"ஆண்டு பலவாகியும் என்னிடம் நரையில்லையே எனறு கேட்டால், அதற்குக் காரணம், முதலில், என் மனைவி மிக மாண்பு/சிறப்பு மற்றும் பொறுமை நிறைந்தவளாக இருக்கிறாள். அத்துடன் பிள்ளைகளும் அப்படியே அமைந்துள்ளனர். என் சேவகர்களோ எனக்கு என்ன வேண்டும் என்றறிந்து உதவி செய்பவர்கள். மன்னனோ மக்கள் மீது அன்புடையவன். அவனால் வழி நடத்தப்படும் பொறுப்பு மிக்கவர்களாய் இளைஞர்கள் உள்ளார்கள். இத்தகைய மனிதர்களுக்கிடையில் வாழும் வாய்ப்பைப் பெற்றதால் எனக்கு வயது கூடிய பிறகும் தலை நரைக்கவில்லை" என்றார் பிசிராந்தையார். இதோட பாட்டு

"யாண்டு பலவாக நரையிலவாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்
மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க அதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்
பலர்யான் வாழும் ஊரே"

மேலும் அவர் கோப்பெருஞ்சோழன் இருந்த இடத்தை அடைந்ததும், அவன் வடக்கு நோக்கி உயிர் நீத்தான் என்று கேள்விப்பட்டார். அதனால் தானும் வடக்கு நோக்கி விரதம் இருந்து உயிர் நீத்தாராம். அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!!! வழக்கம் போல எங்க வீட்டு பெரியவங்க இந்த பாட்ட சொல்லி ' நீங்க எல்லாம் இப்படி சொல்லும்படியாவா நடக்கறீங்க. எங்க தலை நரைப்பதே உங்களால தான்' ன்னு திட்டுவாங்க..ஹீ ஹீ

இந்தக்கதையில, நரையில்லாம இருப்பது எப்படி?, தன்னை விட சிறந்த மனைவி கிடைச்சா அத ஒத்துக்க மனம் வருமா?, உள்ளுணர்வு சக்தி என்றொண்டு உண்டு!! மற்றும் நட்புக்கு இலக்கணம் இவர்கள் -இப்படியெல்லாம் கருத்துக்கள் எடுத்துக்கலாம்.ஆனால், அவர் பதிலுல உள்ள 'அந்த நிறைவு/பெருமை' எனக்கு ரொம்ப பிடிச்சதுங்க.. நீ எப்படி இருக்கன்னு கேட்டா, அப்ப எந்த பெரிய தொல்லை இல்லையென்றாலும், இந்த காலத்துல யாராவது ' நல்லா இருக்கேன்'/சௌக்கியம்'- இப்படியெல்லாம் சொல்லறாங்களா.!! ஏதோ இருக்கேன் - இதுதான் அதிகபட்ச நிறைவா இருக்கு..யாருக்குத் தான் ப்ரச்சனை இல்ல..ஆனா, அப்பப்போவாவது, அந்த நிறைவு மனசுக்கு வர நாம எல்லாம் பழகிக் கொள்ளணுங்க..

சரி, இலக்கணத்துக்குப் போவோமா!

இலக்கணம் ஒரு கண்ணோட்டம் - 7

31. யாப்பு இலக்கணம்: யாப்பு என்பது பாட்டு. பாட்டுக்குறிய இலக்கணம் யாப்பிலக்கணம். யாப்பு என்றால் கட்டுதல்ன்னு பொருள். யாக்கை-உடம்பு- கட்டுதல். அதாவது நம்ம உடம்பு ரத்தம், தோல், எலும்பு, நரம்பு போன்றவற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போல எழுத்து, அசை, சீர், தளை,அடி,தொடை என்பவையால தமிழ்ப் பாட்டு புலவர்களால் கட்டப்பட்டுள்ளது. இவைகளை வைத்து 4 பா வகையுள்ளது.1. வெண்பா 2.ஆசிரியப்பா 3. கலிப்பா 4. வஞ்சிப்பா
இதைப் பத்தி படிக்க நிறைய நேரம் தேவை. அதனால நம்ம சான்ற மட்டும் பார்ப்போம்.
1. வெண்பா: மூதுரை, நல்வழி, திருகுறள்,நாலடியார், நள்வெண்பா-இவையெல்லாம் வெண்பா வகை
2. ஆசிரியப்பா: சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
3. கலிப்பா: இது துள்ளல் ஓசையோடு வரும் சா: தக்கயாப்பரணி, பெரியபுராணம்.
4. வஞ்சிப்பா: பட்டினப்பாலை. வேறு சான்றுகள் கிடைத்தால் சொல்லுங்க!!

32. அணி இலக்கணம் பார்ப்போமா!!

செய்யுள் அழகாக அமைய, எழுத்தாலும் பொருளாலும் அழகு சேர்ப்பது அணி இலக்கணம். இதுல சிலவற்றைப் பார்ப்போம்

1. உவமை அணி: 'போன்ற' என்ற பொருளுள்ள உருபு மறையாம வருவது உவமை அணி.
சா: "அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று "

உவமேயம்: அன்பு இல்லாத வாழ்க்கை சிறக்காது
உவமானம்: பாலையிலுள்ள காய்ந்த மரம் தளிர்விடாது
அற்று(போன்ற) என்ற சொல் மறையாம வருது

2. எடுத்துக்காட்டு அணி: 'போன்ற' என்ற பொருளுள்ள உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு அணி.

சா: "தொட்டனைத் தூறும் மணற் கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"

உவமானம்: மணல் கிணறு தோண்டிய அளவு நீர் சுரக்கும்
உவமேயம்: மக்களுக்கு தான் கற்றதற்கேற்ப அறிவு வரும்
இங்கே போல என்பது மறைந்து வருது பாருங்க!!

3. வேற்றுமை அணி: ஏதோ ஒற்றுமை உள்ள ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி.
நம்ம டீ.ஆர் அடிக்கடி இத உபயோகபடுத்தறாரு பாருங்க:)-

சா: "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
புண் இங்க ஒற்றுமை. ஆனால் நாவினால் சொன்ன சுடுசொல்லோட புண் ஆறாது என்பது வேற்றுமை.

4. ஏகதேச உருவக அணி: ஒரு பொருளை உருவகப்படுத்தி அதனோடு தொடர்புடைய மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணியாகும்

சா: "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்".
இங்க, பிறவியை கடலாக உருவகப் படுத்தியிருக்கார். ஆனால், 'இறைவனடி சேராதவ'ர உருவகப் படுத்த வில்லையே!!

5. தற்குறிப்பேற்ற அணி: இயல்பா நடக்கும் ஒன்றை அழகா ஒரு குறிப்போடு இணைத்துச் சொல்வது தற்குறிப்பேற்ற அணி

சா:"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட"

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

6. வஞ்சப்புகழ்ச்சி அணி: புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்

சா: "புகழ்வது போல் இகழ்தல் தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான"

கயவர்கள் தம் மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குறட்பாவின் பொருள். கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)
முற்றும். (மக்களே!! ஒரு வழியா இலக்கணம் முடிந்தது!! )

தெரிந்தால் சொல்லுங்களேன் - 7

உங்களுக்குத் தெரிந்த நல்ல தமிழ் மின்அகராதி இணையங்கள எனக்குச் சொல்லுங்களேன். நான் கண்ட ஒன்று இங்கே!!

6 comments:

செல்வராஜ் (R.Selvaraj) said...

ப்ரியா, உங்களின் இந்த வார இடுகைகள் அனைத்தும் நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. ஓய்வாய் இன்று படிக்க முடிந்தது.

லெக்சிங்டனில் இருந்து எழுதிக் கொண்டிருந்தவர் நீங்கள் தான் என்று நினைக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பே உங்கள் பதிவைப் பார்த்திருக்கிறேன். பிறகு அதிகம் பார்க்க முடியவில்லை. நானும் கூட லெக்சிங்டன் அருகில் லூயிவில்லில் இருந்திருக்கிறேன்.

உங்களுடைய தமிழார்வமும் முனைப்புகளும் பாராட்டத்தக்கவை. வாழ்த்துக்கள்.

மின் அகரமுதலிகள் குறித்துக் கேட்டிருந்தீர்கள். இங்கே பல இணைப்புகள் இருக்கின்றன: http://www.tamilnation.org/books/Dictionaries/index.htm#Tamil_Dictionaries_-_On_Line_

மஞ்சூர் ராசா said...

அன்பு சகோதரி ப்ரியாவுக்கு வணக்கம். உண்மையிலேயே ஒரு மிகச்சிறந்த பயனுள்ள வாரமாய் உங்களின் நட்சத்திரவாரம் அமைந்துவிட்டது.

சுருக்கமாகவும் எளிய நடையிலும் தமிழ் வகுப்புகளை எடுக்கும் உங்களை இதுவரை படிக்காமல் இருந்தது அல்லது தவறவிட்டது எப்படி என்று புரியவில்லை.

சிறந்தப் பதிவுகள்.

மிகவும் நன்றி. வாழ்த்துகள்.

மஞ்சூர் ராசா
முத்தமிழ் குழுமம்
http://groups.google.com/group/muththamiz

Anonymous said...

அடைக்கும் தாள் இல்லை அது அடைக்குந்தாழ்!

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

செல்வராஜ் அவர்களே !

மிக்க நன்றி!! எனக்கு இவ்வளோ ஊக்கம் கிடைக்கும் னு நான் எதிர்பார்க்கவே இல்ல!!

என் நண்பர்கள் சிலர் லெக்சிண்டனிலிருந்து பதிவு எழுதுகிறார்கள்...அப்பப்போ!!

இணைப்புகளுக்கு ரொம்ப நன்றி!!

மஞ்சூர் ராஜா அவர்களே!!
ரொம்ப நன்றி.. நான் அவ்வப்போது தான் பதிவுகள் எழுதி வந்தேன்.. மேலும் தமிழ் படிக்க முடியாத தமிழர்களுக்காக www.kuttipriya.blogspot.com ல் அடிக்கடி எழுதி வரேன்.அதனால என்க்கும் நிறைய பேர் தெரியாது..என்னையும் யாருக்கும் தெரியாது..ஹீ ஹீ..

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!!
நன்றி

anon avargale :)-

நான் நிறைய இடத்துட அப்படி பிரிச்சு எழுதுற வழக்கமுண்டு..சா: உவமையணிய உவமை அணி ண்ணு எழுதி இருக்கேன் பாருங்க..
தமிழ் அவ்வளவா படிக்க வராதவங்களுக்கும் புரியத் தான்!!

ஹீ.. ஹீ..

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

அனான்,
புரிஞ்சுது
ஹீ ஹீ 'தாழ்' சரி பண்ணிட்டேன்!!

கீதா சாம்பசிவம் said...

//யாருக்குத் தான் ப்ரச்சனை இல்ல..ஆனா, அப்பப்போவாவது, அந்த நிறைவு மனசுக்கு வர நாம எல்லாம் பழகிக் கொள்ளணுங்க.//

சத்தியமான வரிகள்.