Tuesday, December 20, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்...உள்ளப்படா

உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:
மனத்தினால் இதுதான் என்று உருவகப்படுத்த இயலாத திருவுருவத்தை நினைத்தலும், களங்கமில்லாத மகிழ்ச்சி உண்டாக்கத்தக்க மேலான கருணை அருள் வெள்ளத்தையுடைய பெருமான, எம் இறைவன் அடியேனை தனியாக ஆட் கொண்டார் - அந்த இறைவனிடத்திலேயே போய் ஊதுவாய் அரச வண்டே!

பதவுரை :

உள்ளப்படாத - மனத்தினால் இதுதான் என்று உருவகப்படுத்த இயலாத,

திருவுருவை - திருவுருவத்தை.

உள்ளுதலும் - நினைத்தலும்

கள்ளப்படாத - களங்கமில்லாத

களிவந்த - மகிழ்ச்சி உண்டாக்கத்தக்க

வான்கருணை - மேலான கருணை

வெள்ளப் பிரான் - அருள் வெள்ளத்தையுடைய பெருமான்

எம்பிரான் - எம் இறைவன்

என்னை - அடியேனை

வேறே - தனியாக

ஆட்கொள் - அடிமைகொண்ட

அப்பிரானுக்கு - அந்த இறைவனிடத்திலேயே

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை:

இந்த பாடலின் மூலம் 'இறைவனை நினைத்தாலே போதும். அவன் தன் களங்கமில்லாத அருட் கருணையினால் நம்மை எற்றுக் கொள்வார்' என்று சொல்கிறார்.