Thursday, September 29, 2005

திருவாசகம்- புற்றில் வாள்

6.கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: எங்கும் கோணாது நேரே செல்லும் அம்பு கண்டு அஞ்ச மாட்டேன். எமனது கோபத்துக்கு அஞ்ச மாட்டேன். நீண்ட பிறையாகிய அணிகலனையுடைய சிவபெருமானை எண்ணி, கசிந்து, உருகி, ஒளி பொருந்திய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருக துதித்து நின்று, புகழ மாட்டாத ஆண்மையுடையரல்லாரைக் காணின், கடவுளே, நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.


பதவுரை:
கோண் இலா - (Pope separates like this) எங்கும் கோணாது நேரே செல்லும்

கோள் நிலா - (Wiki group separates like this) கொலைத் தன்மை தங்கிய

வாளி - அம்புக்கு

அஞ்சேன் - அஞ்ச மாட்டேன்

கூற்றுவன் - எமனது சீற்றம்

நீள்நிலா - நீண்ட பிறையாகிய

அணியினானை - அணிகலத்தையுடைய சிவபெருமானை

நினைந்து - எண்ணி

நைந்து உருகி - கசிந்து உருகி

நெக்கு - நெகிழ்ந்து

வாள் நிலாம் - ஒளி பொருந்திய

கண்கள் - விழிகளில்

சோர - ஆனந்தக் கண்ணீர் பெருக

வாழ்த்தி நின்று - துதித்து நின்று

ஏத்த மாட்டா - புகழ மாட்டாத

ஆண் அலாதவரைக் கண்டால் - ஆண்மையுடையரல்லாரைக் காணின்

அம்ம - ஐயோ/ கடவுளே!!

நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

Note: 'aaru' meaning 'alavillaadhadhu' .. thats why we call 'river' as 'aaru'


விளக்கவுரை:
இறைவனது திருவடிவத்தை நினைந்து பேரின்பத்தில் திளைத்திராதவரைக் காணின் அஞ்ச வேண்டும் என்றார்.

இப்பாடலிலேயே (புற்றில் வாள்..) 'நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா' என்ற வரிகள் என்னை மிகவும் பிடித்த (பாதித்த) ஒன்று. காரணம், இளையராஜா அவர்கள், இங்கு எவரையும் மயக்கும் இசை ஓன்றை இவ்வரிகளுக்கு அளித்துள்ளார்.


'வாணிலாங் கண்கள் சோர' - இவ்வரிகளின் ஆலாபனை, அதன் பொருளுக்கு எற்ப, கண்களில் நீர் கொண்டு வரும் சக்தி கொண்டுள்ளது.
மேலும் 'நினைந்து நைந்துருகி நெக்கு' இவ்வரியை கவனியுங்கள்.. அது 'நினைந்து நினைந்து உருகி நெக்கு ' அல்ல. அப்படி இருந்திருந்தால் அது வெறும் அடுக்குத்தொடராக மட்டுமே இருந்திருக்கும் (ஈர்கும் சக்தியைப் பெறாது).
ஆனால் மாணிக்கவாசகரோ 'நினைந்து, நைந்து (கசிந்து), உருகி, நெக்கு (நெகிழ்ந்து)' என்று கூறுகிறார். மனதை உருக்க என்ன பொருத்தமான வார்த்தைப் ப்ரயோகம்!! இதை இசையோடு கேட்கும் போது நம்மை நிச்சயம் உருக்கும் சக்தியைப் பெருகிறது.

திருச்சிற்றம்பலம்!!

(Dedicated to Lord Shiva - The MAN of Revered hall of consciousness Chidambaram. In Chidambaram, a dance contest between Kali and Nataraja was held. Nataraja performed Urthuvathandavam and won. )

முற்றும்.

Tuesday, September 27, 2005

திருவாசகம் - புற்றில் வாள்..

5.தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: கட்டுத்தறியில் உள்ள ஆண் யானையைக் கண்டு அஞ்ச மாட்டேன். நெருப்பைப் போன்ற கண்களையுடைய புலியைக் கண்டு அஞ்ச மாட்டேன்.மணம் வீசுகின்ற சடையையுடையவனான என் அப்பன், தேவர்களாலும் அடைய முடியாத நெருங்கிய/செறிவு தரும் கழல்கள் அணிந்த திருவடிகளை சிறப்போடு இன்பமாக இருக்காத அறிவிலிகளைக் காணின், ஐயோ, நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

பதவுரை :
தறிசெறி - கட்டுத்தறியிலே பொருந்தியிருக்கும்
களிறும் அஞ்சேன் - ஆண் யானைக்கும் அஞ்ச மாட்டேன்
தழல் விழி - நெருப்புப் போன்ற கண்களையுடைய
உழவை அஞ்சேன் - புலிக்கும் அஞ்சமாட்டேன்
வெறி கமழ் - மணம் வீசுகின்ற
சடையன் - சடையையுடையவனும்
அப்பன் - தந்தையுமாகிய இறைவனது
விண்ணவர் நண்ணமாட்டா - தேவர்களாலும் அடைய முடியாத
செறிதரு - நெருங்கியகழல்கள்
ஏத்தி - கழலணிந்த திருவடிகளைத் துதித்து
சிறந்து - சிறப்புற்று
இனிது இருக்க மாட்டா - இன்பமாக இருக்க மாட்டாத
அறிவிலாதவரைக் கண்டால் - அறிவிலிகளைக் காணின்
அம்ம - ஐயோ
நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கவுரை:

அம்பலத்தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்கி இன்புறும் தன்மை இல்லாதவ்ர்கள் அறிவிலிகளே என்று மாணிக்கவாசகர் நொந்து கொள்கின்றார். இறைவனது திருவடியை வணங்கி இருத்தல் எவ்வளவு இன்பம் தரக்கூடியது என்பதையும் மிக அழகாகச் சொல்லுகின்றார்.

Saturday, September 24, 2005

திருவாசகம் - புற்றில் வாள்..

3. கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ள நெக்கில்
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: கிளி போல் பேசும் பெண்களின் மொழி கண்டு அஞ்ச மாட்டேன். அவர்களுடைய வஞ்சகமான (Pope calls it wanton smile) புன்சிரிப்பு கண்டு அஞ்ச மாட்டேன். வெண்மையான திருநீர் அணிந்த மேனியையுடைய அந்தணனின் பாதத்தை அடைந்து கண்களில் நீர் ததும்பி வண்ங்கி உள்ளம் நெகிழும் கனிவு இல்லாதவரைக் கண்டால் ஐயோ/கடவுளே, நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

பதவுரை :
கிளி அனார் - கிளியை ஒத்த பெண்கள்
கிளவி அஞ்சேன் - சொற்களுக்கு அஞ்ச மாட்டேன்
அவர் - அவரது
கிறி முறுவல் அஞ்சேன் - வஞ்சனையுடைய புன்சிரிப்புக்கும் அஞ்ச மாட்டேன்
வெளிய நீறு ஆடும் - வெண்மையான திருநீற்றில் மூழ்கிய
மேனி - மேனியையுடைய
வேதியன் பாதம் நண்ணி - அந்தணனது திருவடியை அடைந்து
துளி உலாம் கண்ணர் ஆகி - நீர்த்துளிகள் சிந்துகின்ற கண்களையுடையவராய்
தொழுது அழுது - வணங்கி அழுது
உள்ளம் நெக்கில் - உள்ளம் நெகிழ்ந்து
அளி இலாதவரைக் கண்டால் - கனிவு இல்லாதவரைக் காணின்
அம்ம - ஐயோ / கடவுளே
நாம் அஞ்சும் ஆறு - நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும்

விளக்கவுரை: கிளி போல் பேசும் பெண்களின் மொழி கண்டு அஞ்ச மாட்டேன். அவர்களுடைய வஞ்சகமான புன்சிரிப்பு கண்டு அஞ்ச மாட்டேன்.பெருமானது அருட் கோலத்தைக் கண்டு உருகாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்கின்றார். துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ள நெக்கில்- இந்த வார்த்தைகளை பாட்டில் கேட்கும்போது கண்களில் நீர் சொரிய மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் நிற்பதாக உருவகப்படுத்திப் நாம் பார்க்கலாம்.


4.பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: எல்லா நோய்கள் வந்தாலும் அஞ்ச மாட்டேன். பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்ச மாட்டேன். பிறை நிலாவை அணிந்துள்ள சிவபெருமானின் தொண்டர்களோடு சேர்ந்து அந்த திருமால் வலிமையான நிலத்தைப் பிளந்து சென்றும் காண முடியாத சிவனின் திருவடியைத் துதித்து திருநீரு அணியாதவரைப் பார்த்தால், கடவுளே, நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும்

பதவுரை:
பிணி எலாம் - எல்லா வகையான நோய்களும்
வரினும் - வந்தாலும்
அஞ்சேன் - அஞ்ச மாட்டேன்
பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் - பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்ச மாட்டேன்
துணிநிலா அணியினான்றன் - பிறையை அணிகலனாகவுடைய சிவபெருமானது
தொழும்பரோடு அழுந்தி - தொண்டரோடு பொருந்தி
அம்மால் - அத்திருமால்
திணி நலம் பிளந்தும் காணா - வலிமையான நிலத்தை அகழ்ந்தும் காணமாட்டாத
சேவடி பரவி - சிவந்த திருவடியைத் துதித்து
வெண்ணீறு அணிகிலாதவரை - திரு வெண்ணீறு
அணியாதவரைகண்டால் - காணின்
அம்ம - ஐயோ
நாம் அஞ்சும் ஆறு - நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும்

விளக்கவுரை:இந்த பாடலில் மாணிக்கவாசகரின் சைவப் பற்று நன்கு வெளிப்படுகிறது. மேலும் இங்கு திருமால் சிவனின் அடியை அறிய விரும்பி வராக அவதாரம் எடுத்து நிலத்தைப் பிளந்து சென்றும் காண முடியாத கதையை இங்கு சொல்கிறார். (Lord Shiva later blessed Lord Brahma and Lord Vishnu in the form of Lingodbhavar.)

தொடரும்..

Friday, September 23, 2005

திருவாசகம் - புற்றில் வாள்

புற்றில் வாள்..

இது ' அச்சப்பத்து' என்ற பகுதியில் வருகிறது - சிதம்பரத்தில் மாணிக்கவாசகர் பாடியது. இறைவனது திருவருள் நெறிக்குப் புறம்பானவற்றைக் கண்டு அஞ்சிப் பாடியது ஆதலால், அச்சப் பத்து எனப்பட்டது. 'தீயவை தீய பயத்தலால' அச்சம் உண்டாயிற்று என்றார்.

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சு மாறே.


பொருள்:புற்றில் வளைந்து இருக்கும் பாப்பைக் கண்டு அஞ்ச மாட்டேன். பொய் பேசுபவர்களின் உண்மை போன்ற சொற்களைக் கண்டு அஞ்ச மாடேன்.அடர்த்தியான நீண்ட சடையையுடைய பெருமைக்குரிய நெற்றிக்கண்ணைக் கொண்ட எம்பெருமானின் பாதத்தை அடைந்து, வேறொரு தெய்வம் இருப்பதாக எண்ணி எம்பெருமானை போற்றாதவரைப் பார்த்தால், கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

பதவுரை :
வாள் அரவு - வளைந்து உள்ள கொடிய பாம்பு
அஞ்சேன் - அஞ்சமாட்டேன்
பொய்யர்தம் மெய்யும் - பொய்யர்களது உண்மை போன்ற சொற்களுக்கும்
கற்றை வார்சடை - அடர்த்தியான நீண்ட சடை
எம் அண்ணல் - எம் பெரியோனாகிய
கண்ணுதல் - நெற்றிக்கண்ணையுடைய இறைவனது
பாதம் நண்ணி - திருவடியை அடைந்தும்
மற்றும் ஓர் தெய்வம் தன்னை - வேறொரு தெய்வததை
உண்டு என நினைந்து - இருப்பதாக எண்ணி
எம் பெம்மான் கற்றிலாதவரை - எம்பெருமானைப் போற்றாதவரை
அம்ம - ஐயோ/கடவுளே! (exclamation!!)
நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்கின்ற வகை சொல்ல முடியாத அளவு ஆகும்

விளக்கவுரை:

எம் பெருமானைப் போற்றாதவரை 'கற்றிலாதவர்' என்று சொல்கிறார். பாம்பையே அணியாகப் பூண்டு, ஞானத்தையே கண்ணாகக் கொண்டு உள்ள இறைவன் அடியார், புற்றில்வாழ் அரவத்தையும் பொய்யர்தம் மெய்யையும் கண்டு அஞ்ச வேண்டுவதில்லை.ஆனால், இறைவனது திருவடியை அடைந்தும் பிற தெய்வங்களை வழிபடுவாரைக் கண்டு அஞ்ச வேண்டும் என்கின்றார்.

'எம் பெம்மாற்கு அற்றிலாதவரை' எனப் பிரித்து, எம் இறைவன்பொருட்டுப் பிற பற்றுகள் நீங்காதவரை என்றும் பொருள் கூறலாம்.

இளையராஜாவின் இசையில் 'கற்றிலாதவரை' என்ற இடத்தில் உள்ள அழுத்தம் (stress) மிக அருமையாக இருக்கும். அம்ம - கடவுளே என்று மன்ம் நொந்து கொள்கிறார்.

இதன் மூலம் மாணிக்கவாசகர் தன் ஆழ்ந்த அன்பைத் தெரிவிப்பதோடு மட்டும் இல்லாமல் அவர் ஒரு relgious fanatic/ rebel இல்லை என்பதையும் காட்டுகிறார். ஏன் என்று கேட்கிறீர்களா?? அவர் அவருடைய இளமைக்காலத்தில் (நல்ல சக்தி உள்ள சமயம்) இதைப் பாடும்போதும் 'இறைவனது திருவடியை அடைந்தும் பிற தெய்வங்களை வழிபடுவாரைக் கண்டு அஞ்ச வேண்டும்' என்று தாழ்மையுடன் கூறுகின்றாரே ஒழிய அவர்களை மாற்ற / அடிக்க வேண்டும் என்று கூறவில்லை..

2.
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: வன்மையான மாமிசம் கொண்ட வேல் கண்டு அஞ்ச மாடேன்; வளையலை அணிந்த பெண்களுடைய கடைக்கண் பார்வைக்கும் அஞ்ச மாட்டேன்; எலும்புகளெல்லாம் உருகும்படியாகப் பார்த்து, பொன்னம்பலத்தில் ஆடுகின்ற, எனது துளையிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து, அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பற்றவரைக் காணின், கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

பதவுரை:
வன்புலால் - வலிமையான மாமிசம்
வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் -வளையலை அணிந்த பெண்களுடைய கடைக்கண் பார்வைக்கும் அஞ்ச மாட்டேன்
என்பு எலாம் உருக நோக்கி - எலும்புகளெல்லாம் உருகும்படியாகப் பார்த்து
அம்பலத்து ஆடுகின்ற - பொன்னம்பலத்தில்(சிதம்பரத்தில்) ஆடுகின்ற
என் பொலாமணியை ஏத்தி - எனது துளையிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து
அருள் இனிது பருகமாட்டா - அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பு இலாதவரைக் கண்டால் - அன்பற்றவரைக் காணின்
அம்ம - ஐயோ/கடவுளே (exclamation)
நாம் அஞ்சும் ஆறு - கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

விளக்கவுரை:
'எமனைக் கடிந்து காமனை எரித்த சிவபெருமானது அடியார்க்குக் கொடிய வேலும் மாதரது கூரிய பார்வையும் துன்பம் தரமாட்டா' என்பார். அதையே 'வன்புலால் வேலும் அஞ்சேன், வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்' என்றார்.

'ஆனால், அம்பலத்தாடும் பெருமானது இனிமையான பார்வையையும் அழகிய நடனத்தையும் கண்டு அன்புறாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும்' என்பார் . அதையே 'அம்பலத்தாடுகின்ற என் பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.

தொடரும்..

Thanks to wiki group and project madurai for having G.U Pope's english tranliteration online !

Thursday, September 22, 2005

ஆத்திசூடி- 6

26. இலவம் பஞ்சில் துயில்
(துயில் - தூங்கு)
இலவம் பஞ்சிலானான மெத்தையில் படுத்து உறங்குவாயாக!
27. வஞ்சகம் பேசேல்
மனத்திலே வஞ்சம் வைத்துக் கொண்டு பிறரிடம் பேசாதே!
28. அழகு அலாதன செய்யேல்
நன்மையில்லாத காரியங்களைச் செய்யாதே!
29. இளமையில் கல்
இளம்பருத்திலேயே கல்வியைக் கற்றுக் கொள்!!
30. அறனை மறவேல்
தருமம் செய்தலை எப்பொழுதும் மறக்காமல் செய்வாயாக!!
தொடரும்..
விரைவில் திருவாசகம் (symphony verses)

Tuesday, September 20, 2005

ஆத்திசூடி- 5

21. நன்றி மறவேல்
ஒருவர் செய்த நன்றியை என்றும் மறவாதே!

22. பருவத்தே பயிர் செய்
(பருவம் - காலம் பயிர் - வளர்)
எத்தொழிலையும்/எக்கலையையும் செய்ய வேண்டிய காலத்தில் (வளர) செய்வாயாக!

23. மன்று பறித்து உண்ணேல்
(மன்று பறித்து - கைக்கூலி வாங்குதல் (I am not sure but I guess so))
நியாய சபைகளில் நியாயம் கூறுவோனாக இருந்து கைக்கூலி வாங்கி வாழ்க்கை நடத்தாதே!

24. இயல்பு அலாதன செய்யேல்

இயற்கைக்கு மாறுபட்ட காரியத்தைச் செய்யாதே!

25. அரவம் ஆட்டேல்
(அரவம் - பாம்பு)

பாம்பைப் பிடித்து விளையாடதே !
தொடரும்..
(விரைவில் (symphony verses alone) திருவாசகம்.. )

Monday, September 19, 2005

ஆத்திசூடி- 4

16. சனி நீராடு
(சனி- குளிர்ந்த)

குளிர்ந்த தண்ணீரில் குளி!!
(Many people interpret this wrongly as ' take bath on saturdays' which is not what avvai meant(though saturdays are good for oilbath). My thatha while teaching us was annoyed with some interpreters and specifically used to tell us this.)

17 . ஞயம்பட உரை
(ஞயம்பட- இனிமையாக ; உரை - பேசு)

இனிமையான மொழிளையே பேசு!!

18. இடம்பட வீடு எடேல்
(இடம்பட - நிறைய இடம் அடையுமாறு ; எடேல் -எடுக்காதே)

இடம் வீணாகக் கிடக்குமாறு பெரிய வீடு கட்டாதே!!
19. இணக்கமறிந்து இணங்கு
(இணக்கம் அறிந்து - யாருடன் பழகுகிறோம் என்று அறிந்து ; இணங்கு-பழகு)

ஒருவரோடு நட்பு கொள்வதற்கு முன் அவருடைய குணநலன்களை தெரிந்துகொண்டு நட்பு கொள்!!

20. தந்தை தாய் பேண்
(பேண்- காப்பாற்று)

தந்தை தாயைக் காப்பாற்றுவாயாக!!
தொடரும்..

Sunday, September 18, 2005

ஆத்திசூடி- 3

11. ஓதுவது ஒழியேல்
ஓதுவது- கற்பது ஒழியேல்- நிறுத்தாதே

நூல்களைக் கற்பதை நிறுத்தி விடாதே

12.ஓளவியம் பேசேல்
ஓளவியம்-பொறாமை மொழி

பொறாமை மொழிகளைப் பேசுதலை ஒழிப்பாயாக!!

13. அஃகஞ் சுருக்கேல்
அஃகு - தானியம் சுருக்கேல்- சுருக்காதே

நெல் முதலிய தானியங்களைக் குறைவாக விற்காதே!!

14. கண்டொன்று சொல்லேல்
கண்டொன்று- பார்க்காததை

பார்க்காதவற்றைப் பார்த்ததாகப் பேசாதே

15. ஙப்போல் வளை
ஙப்போல்- ங எழுத்து போல்

ஙகரம் போல் உற்றார் உறவினர்களுக்கு வளைந்து கொடு
தொடரும்..

Saturday, September 17, 2005

ஆத்திசூடி- 2

6. ஊக்கமது கைவிடேல்
(ஊக்கமது - உள்ளக் கிளச்சியை; கைவிடேல் - தளர்ந்து போக விடாதே)

ஒரு காரியத்தை செய்தக்கண் உண்டாகிய உள்ளக் கிளச்சியை தளர்ந்து போக விடாதே!!

7. எண்ணெழுத் திகழேல்
(எண் - கணிதம்; எழுத்து- இலக்கண நூல்; இகழேல் - இகழ்ந்து ஓதுக்கி விடாதே)

கணித நூல் ,இலக்கண நூல் முதலியவைகளை இகழ்ந்து ஓதுக்கி விடாமல் கற்க வேண்டும்.
8.ஏற்பது இகழ்ச்சி
(ஏற்பது - பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி - இழிவு தரும்)

பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.

9. ஐயமிட்டு உண்
(ஐயமிட்டு - கேட்பவற்கு கொடுத்து)

கேட்பவற்கு கொடுத்து உண்ண வேண்டும்

10. ஒப்புர வொழுகு
(ஒப்புர - உலக போக்கிற்கு எற்றவாறு; ஒழுகு - நட)

உலக போக்கிற்கு எற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
தொடரும்..

Friday, September 16, 2005

ஆத்திசூடி- 1

மக்கள் ஓழுக்கமாக வாழவேண்டும். ஓழுக்கம் உயிரினும் மேலாக போற்றுதற்குரியது என்று கொண்டவர்கள் தமிழ் மக்கள். ஓழுக்க நெறிகளை முறைப்படுத்தவே சான்றோர்கள் நீதி நூல்களை எளிமையான தமிழில் நுட்பமான கருத்துச் செறிவுடன் அமைத்துள்ளனர்.

அவ்வகையில் ஆத்திசூடி ஒளவை எழுதிய எளிமையான நீதி நூல். அதில் சிலவற்றை பின் வரும் பகுதியில் காண்போம்..

ஆத்திசூடி
கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே!!

ஆத்தி சூடி - திருவாத்தி மலர்மாலையை அணிந்த
யமர்ந்த - சிவபெருமானால் விரும்பப்பட்ட ( மேல் அமர்ந்த )
தேவனை- ஆனைமுகக் கடவுளை
ஏத்தி ஏத்தி - பலகாலும் (மேலும் மேலும்)
தொழுவோம் யாமே - நாம் வணக்கம் செய்வோம்
பொருள்: திருவாத்தி மலர்மாலையை அணிந்த சிவபெருமானால் விரும்பப்பட்ட ஆனைமுகக் கடவுளை நாம் பலகாலும் வணக்கம் செய்வோம்!!

1. அறஞ்செய விரும்பு
(அறம் - தருமம்)

தருமம் செய்ய நீ விரும்புவாயாக!!

2. ஆறுவது சினம்
(சினம் -கோபம்; ஆறுவது- தணிவது)

கோபம் தணிந்து விடக்கூடிய தன்மையுடையது!!

3. இயல்வது கரவேல்
(இயல்வது- இயன்ற ; கரவேல்-தருமத்தை செய்யாமல் இரூத்தல் கூடாது)

செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது!!

4. ஈவது விலக்கேல்
(ஈவது- கொடுப்பதை; விலக்கேல்-தடுக்காதே)
ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதைத் தடுக்காதே !!
5. உடையது விளம்பேல்
(உடையது- உன்னிடம் உள்ளதை; விளம்பேல்- கூறாதே)

உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி கூறாதே ( பெருமையாக பேசாதே) !!

(தொடரும்)

தினம் ஒரு கல்வி !!

வெகு நாட்களாகவே வலைப்பதிவில் தமிழில் என் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இன்று அது நிறைவேறியது!!

அதன் காரணத்தைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அதிகாலையில் அதிசயமாக எழுந்த நான் ஓளவையின் ஆத்திசூடியை நினைவுகூர ஆசைப்பட்டேன். எனக்கு பாதிக்கு மேல் மறந்துபோய்விட்டது என்று இன்று தான் தெரிய வந்தது. என்னைப் போல் எத்தனை பேர் மனம் வருந்துவார்கள் என எண்ணினேன். மேலும், என் தமிழ் ஆர்வமுள்ள சில நண்பர்கள் தமிழ் நூல்களை படிக்க வாய்ப்பு இல்லை என்று கூறியது என் சிந்தையை எட்டியது.

'ஏன் நாம் தமிழில் இன்று முதல் தமிழில் தினமும் சில எளிமையான சான்றோரின் வாக்குகளைகளையும் அதன் பொருளையும் இங்கு சொல்லக்கூடாது' என்ற எண்ணம் உதித்தது. இதன் மூலம் நானும் படிப்பேன். மற்றவர்களும் பயன் அடைவார்கள் என நம்புகிறேன்.

உங்கள் ஆர்வம் - என் உற்சாகம் !!

விரைவில் சந்திப்போம்!!!