Friday, June 16, 2006

விநாயகர் முருகர் சிவபெருமான்

சென்னி முக மாறுளதால் சேர்க்கரமுன் னாலுகையால்
இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்
கண்ணுறுத லானும் கணபதியும் செவ்வேளும்
எண்ணரனு நேரா வரே!!

விநாயகர்

சென்னி முகம் மாறுளதால் - தலையும் முகமும் உடலமைப்புக்கு மாறுபட்டுள்ளதால்
சேர்க்கரம் முன் னாலுகையால்- கரமான துதிக்கை முன் பக்கம் உள்ளதால்
இந்நிலத்திற் கோடொன்று உருக்கையால்- இவ்வுலகில் ஒற்றைக் கொம்பு உள்ளவராய் அமைந்தவராய்
மன்னு குளக் கண் உருதலானும் - நிலைபெற்ற நிவேதனமாக வெல்லம் உள்ளதாலும்
கணபதியும் செவ்வேளும் எண்ணரனு நேரா வரே!! - கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!

முருகன்

சென்னி முகம் ஆறுளதால்- முடுயும் முகமும் ஆறு உள்ளதால்
சேர்க்கர முன்னாலுகையால்- கரங்களோ (முன் நாங்கு= பன்னிரண்டு) பன்னிரண்டு உள்ளதால்
இந்நிலத்திற் கோடு ஒன் றிருக்கையில்- இவ்வுலகில் குன்றமே பொருந்தியிருக்கும் இடமாக இருப்பதாலும்
மன்னு குளக் கண் உறுத லானும் - நிலைபெற்ற சரவணப் பொய்கையில் (குளத்தின் கண்) அவதரித்ததாலும்
கணபதியும் செவ்வேளும் எண்ணரனு நேரா வரே!! - கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!


சிவபெருமான்

சென்னி முகம் ஆறுளதால் - சிரசினிடத்தே கங்கை ஆறு உள்ளதாலும்
சேர்க்கரமுன் னாலுகையால் - முன்புறத்தே சேறும் கைகள் நான்கு உள்ளதாலும்
இந்நிலத்திற் கோடொன் றிருக்கையில் - இவ்வுலகில் மலைமுடியான கைலாச பர்வதம் என்ற மலையில் இருப்பதாலும்
மன்னுகுளக் கண்ணுறுத லானும் - நிலைபெற்ற நெற்றிக் கண்ணைப் பெற்றிருப்பதாலும்
கணபதியும் செவ்வேளும்எண்ணரனு நேரா வரே!! -கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!

Sunday, May 21, 2006

பாம்புக்கும் எள்ளுக்கும்

ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் -ஓடிமண்டை
பற்றிப் பரபரெனும் பாரிற் பிண்ணாகுமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது


பாம்பு
ஆடிக் குடத்தடையும் - படமெடுத்து ஆடிய பின்னே குடத்தில் அடையும்
ஆடும்போதே இரையும் - ஆடும் போது 'ஸ்' என்று இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் - குடத்தை மூடித்திறந்தால் முகத்தை எட்டிக் காட்டும்
ஓடிமண்டைபற்றிப் பரபரெனும் - விரைந்து அதன் தலையைப் பற்றிக் கொண்டால் பரபரவென சுற்றிக் கொள்ளும்
பாரிற் பிண்ணாகுமுண்டாம் - உலகில் பிளவு பட்ட நாக்கை உடையதாயிருக்கும்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது - (இதனால்) உள்ளே அடைத்த பாம்பும் எள் என்று சொல்லுக

எள்
ஆடிக் குடத்தடையும் - செக்கில் ஆடி எண்ணையாய் குடத்தில் அடையும்
ஆடும்போதே இரையும் - செக்கில் ஆடும் போதே இரைச்சல் போடும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் - மூடியைத் திறந்தால் எண்ணையைப் பார்ப்பவரின் முகத்தை தெளிவாகக் காட்டும்
ஓடிமண்டை பற்றிப் பரபரெனும் - விரைய மண்டையில் தேய்த்துக் கொண்டால் பரபரவென குளிர்ச்சி தரும்
பாரிற் பிண்ணாகுமுண்டாம் - உலகிலே பிண்ணாக்கும் அதனிடத்தே உண்டாகும்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது - (இதனால்) உள்ளே அடைத்த பாம்பும் எள் என்று சொல்லுக

தொடரும்..

Saturday, May 13, 2006

கண்ணாடியும் அரசனும்

யாவர்க்கும் ரஞ்சனை செய்து, யாவர்க்கும் அவ்வவராய்
பாவனையாய், தீது அகலக் பார்த்தலால் - மேவும்
எதிரியைத் தன்னுள்ளாக்கி, ஏற்ற ரசத்தால்
சதிருறறால், ஆடி அரசாம்


கண்ணாடி:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து- அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கி
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் - யாருக்கும் அவரவர்களாகவே தெரிந்து
தீது அகலக் பார்த்தலால் - தீமை இல்லாது மங்கலப் பொருளாகப் பார்ப்பதால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி - தன்னை பார்க்கும் எதிர் நிற்பவரை தன்னுள் ஆக்கிக் கொண்டு காட்டி
ஏற்ற ரசத்தால் சதிருறறால - தன் பின்னே ஏற்றப் பட்டிருக்கும் ரசத்தால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் - கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

அரசன்:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து - எல்லா மக்களுக்கு இன்பம் தந்து
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் - எவருக்கும் அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து
தீது அகலக் பார்த்தலால் - தீமை அகற்றி நன்மை அளிக்க முற்படுதலால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி - தன்னை அணுகும் எதிரியை வென்று தன்னுள்ளாக்கி
ஏற்ற ரசத்தால் சதிருறறால் - மேல் கொண்ட நவரசப் பொருள்களால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் - கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

Sunday, May 07, 2006

வைக்கோலும் மதயானையும்

வாரிக் கள்த்தடிக்கும் வந்துபின் கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல் மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலுமால் யானையாம்


வைக்கோல்
வாரிக் கள்த்தடிக்கும் - அறுவடை செய்வோரால் வாரிக்கொணர்ந்து களத்துமேட்டில் அடிக்கப்படும்
வந்துபின் கோட்டைபுகும் - அது பின் கோட்டைக்குள்ளே சேரும்
போரிற் சிறந்து பொலிவாகும் - பெரிய வைக்கோல் போர்களாக சிறப்புற்று அழகாய் விளங்கும்

மதயானை
வாரிக் கள்த்தடிக்கும் - பகைவர்களைத் துதிக்கையினாலே வாரி போர்க்களத்தில் அடித்துக் கொல்லும்
வந்துபின் கோட்டைபுகும் - பின்னே பகயரசரின் கோட்டைக்குள் புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - இவ்வாறாக போர்த்துரையிலே சிறந்து மேன்மையுடையதாய் விளங்கும்

சீருற்ற - சிறப்புற்ற
செக்கோல் மேனித் திருமலைரா யன் - செந்நிறமான மேனியுடைய
வரையில் - மலைச்சாரலிடத்தில்
வைக்கோலுமால் யானை - வைக்கோலும் மதயானை
யாம் - எவ்வாறு எனில்

தொடரும்..

Sunday, March 05, 2006

நாய்க்கும் தேங்காய்க்கும்

ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காயது இல்லா திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் நேர் செப்பு!!


சேடியே -தோழியே
தீங்காயது இல்லா திருமலைராயன் வரையில் - தீமையில்லாத திருமலைராயன் எல்லைக்குட்பட்ட நாட்டில்
தேங்காயும் நாயும் நேர் செப்பு- தேங்காயும் நாயையும் ஒப்பிடலாம் (எப்ப்டியென்றால்)!!

தேங்காய்:
ஓடும் இருக்கும்- தனக்குள் ஓட்டை உடையது!
அதனுள்வாய் வெளுத்திருக்கும் - உள்ளே வெண்மையாய் தேங்காயைக் கொண்டிருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - அனைவாராலும் விரும்பப்படும் குலையாய் தொங்குவதற்கும் அது கோணாது

நாய்:
ஓடும் - சிலசமயம் ஓடும்
இருக்கும்- சிலசமயம் இருந்த இடத்தில் நிற்கும்
அதனுள்வாய் வெளுத்திருக்கும் - அதன் வாயில் உட்புறம் வெண்மையாய் இருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - அதற்கு விருப்பமான குரைத்தல் செய்வதிலே அது வெட்கப்படாது (ஓயாது குரைக்கும்)

Monday, February 27, 2006

பாம்புக்கும் எலுமிச்சைக்கும்

பாம்புக்கும் எலுமிச்சம் பழத்துக்கும்:
முன்னுரை (Introduction): காளமேகப் புலவர் திருமலைராயன் எனற சிறப்பு வாய்ந்த மன்னனிடம் சென்று பாடிப் பரிசு பெறலாம் என்று எண்ணி அவரைக் காண வருகிறார். வழியில் வளமான அவன் நகரத்தைப் பார்த்து பூரித்து அரண்மனை வந்தடைந்தார். அரண்மனையில் திருமலைராயனோ தன் அரண்மனைக் கவிஞர்களின் (தண்டிகைப்புலவர் ம்ற்றும் பலர்) வயப்பட்டு காளமேகப்புலவரை சரியாக மதிக்கவில்லை. இருக்கை அளிக்காமல் இருக்க காளமேகப்புலவர் சரஸ்வதியைத் துதிக்க அரசனின் சிம்மாசனம் வள்ர்ந்து புலவருக்கு இடமளித்தாக வரலாறு. அதையும் பொருட்படுத்தாது புலவரோ தன் கவித்திற்னைக் காட்டி அவையை ஆச்சர்யப்படுத்தி அவர்களின் தவரை உணரவைக்க எண்ணினார். அப்போது தண்டிகைப்புலவர் சிலேடைப் பாடக் கோரி தலைப்பு (i mean topic, say, here paampum elumicchaiyum) அளிக்க காளமேகப்புலவர் உடனடியாகப் பாடியவை.

மக்களே !!! என் எழுத்தோ, வரிகளோ புரியவில்லை யென்றாலோ / தவறாக இருந்தாலோ மன்னித்து / கருத்து பரிமாணம் செய்ய தங்களை வேண்டுகிறேன்.

பெரிய விடம் சேரும் பித்தர் முடிஏறும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் - எரிகுணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம் !!



தேன் பொழியும் சோலையுடைய திருமலைராயனின் மலைச்சாரலில் பாம்பும் எழுமிச்சம் பழம் போன்றதாகும்

எப்படியென்று (ஒரே வரிக்கு உள்ள இரு அர்த்தங்களைப்) பார்ப்போம்!!!
பாம்பு:
பெரிய விடம் சேரும் - மிகுதியான விஷம் உடையாதாயிருக்கும்
பித்தர் முடிஏறும் - பித்தனான சிவனின் திருமுடியில் இருக்கும்
அரி யுண்ணும் - காற்றை புசிக்கும் (உண்ணும்)
உப்பும் -அதனால் உடல் உப்பி இருக்கும்
மேலாடும் - மேலாக தலை தூக்கி ஆடும்
எரிகுணமாம் - சினமுடைய குணத்தினை உடையதாயிருக்கும்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம் !!
எலுமிச்சை:

பெரிய விடம் சேரும் - பெரியவர்களிடத்து கொடுக்கப்பட்டு சேர்ந்து இருக்கும் பித்தர் முடிஏறும் - பித்தனின் (சித்த ப்ரம்மை பிடித்தவனின்) தலையில் தேய்க்கப்படும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் - (ஊறுகாய் செய்யும் போது) அரியப்பட்டு உப்பு மேல் தூவப்பட்டிருக்கும்
எரிகுணமாம் - அதன் சாறு பட்டால் எரியக்கூடிய தன்மை கொண்டது !!

தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம் !!

Tuesday, February 21, 2006

காளமேகமாய் சிலேடை!!!

நண்பர்களே!!
வெகுநாட்களுக்குப் பிறகு இங்கு சந்திக்கிறோம்!! இன்னும் இத்தளத்திற்கு வந்து "எதாவது பதிவு உள்ளதா?" எனப் பார்க்கும் நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

ஆத்திசூடிக்குப் பிறகு மற்றொரு நல்ல இலக்கியத்தைப் பற்றியோ (அ) அதற்கு மொழிபெயர்ப்போ செய்ய வேண்டுமென்ற அவா ஒருபுறமிருக்க, ஆராய்ச்சி வேலை மற்றொரு புறம் இழுக்க நான் வேலைக்கு முக்கியத்துவம் த்நதேன்.எழுத வேண்டுமெனற ஆசையை (படிக்காமல்/உழைக்காமல் ) குட்டிப்ரியா தளத்தில் எழுதி தீர்த்துக் கொண்டேன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, சென்ற வாரம், சில நூல்களைப் புரட்டிப் பார்த்தேன். ஆனால், சொந்தமாக மொழிபெயர்க்க நிறைய நேரமும், கடும்உழைப்பும், விடாமுயர்ச்சியும் தேவை என்று உணர்ந்தேன.அது இப்பொழுது முடியாது என்று வருந்திக் கொண்டிருக்க, வாசகர்களுக்கு "நாம் படித்த (அ) படிக்கின்ற சிலவற்றைச் சொல்லலாமே" எனறு தோன்றியது. அதன் விளைவே இந்த (ம) பின்வரும் பதிப்பு (கள்)!!

"கவிஞர்கள் எல்லோரும் மேதாவிகள்!! அவர் போல் (அ) இவர் போல் என்னால் எழுத முடியவில்லையே! முடியவும் முடியாது!!"
- என்னைப பொருத்த வரை இவை சரியான கருத்து - ஆனால் தவறான சிந்தனை!! ஏனெனில் கவிஞன் பிறப்பதில்லை - உருவாக்கப்படுகின்றான் ! காலமும், சூழ்நிலையும், சுற்றுப்புறமும் உதவ ஒரு சராசரி மனிதன் கவிஞனாகின்றான்! கவிஞர்களின் எழுத்துகளில் தனித்துவம் இருப்பதால் தான் ஒவ்வொருவரும் அவரவர் வழிநடையின் மூலம் சிறப்பு பெருகின்றனர். யாரும் மற்றொருவர் போல் எழுத முடியாது!! எழுதவும் தேவையில்லை!!!

கவிஞர் எனறதும் என் நினைவுக்கு வருபவர் பாரதியே !! அவர் பாடல்கள் உண்மையை கக்கும் ; எதார்த்தம் நேரே நெஞ்சில் வேலாய்ப் பாயும் (point blankaa) . அதைக் படித்து, சொல்ல முடியாத இன்பத்தில் பல நாட்கள் திளைத்துள்ளேன்!! அதனால் மற்ற கவிஞர்களின் எழுத்தை ரசிக்காமல் இல்லை..பாரதிதாசனின் பாட்ல்களில் அன்பும் பாசமும் தேனாய்ப்பாயும் விதமும் ஒர் தனி அழகே . மாணிக்கவாசகரின் பாடலோ மனத்தை உருக்கும் பக்தியைக் காட்டும் !!

இப்படி எனக்குப் பிடிதத நிறைய கவிஞர்களில் காளமேகப் புலவரும் ஒருவர். அவரைப் பற்றி நினைத்தாலே அவரின சிந்தனைச்சிறப்பே நினைவுக்கு வருகிறது. தமிழ்ப்புத்தகத்தில் எழாம்-எட்டாம் வ்குப்பில் படித்த "காக்கைக்கா காகூகை" என்ற பாடலினால் சொக்கி இழுக்கப்பட்டு, சுய சம்பாத்தியம் பெற்றதும் அவரின் தனிப்பாடல் நூலை வாங்கிப் படித்தேன். இன்றும் நாளையும் திரும்பப் படிக்கிறேன்.அவ்வளவு புத்துணர்ச்சி அவர் சிந்தனையில் - அவர் சொற்களில்!! . அவருடைய வரலாற்றை உங்களுக்குச் சொல்ல அள்வளாது ஆசை இருப்பினும், அவரின் கவிதைகளைப் பற்றிப் பேச, அதன் சுவையை உங்களுடன் பகிர எண்ணும் ஆசையே விஞ்சி இருக்கிறது!!
அடுத்து வரும் பதிவுகளில் அவருடைய கவிதைகளில் ஒரு வகையான சிலேடைக் கவிதைகளைகளையும் அதன் பொருளையும் பதிக்க எண்ணியுள்ளேன். உங்களின் ஆர்வத்தைத்/எண்ணத்தை தெரிவியுங்கள்!!பிடித்திருந்தால் மேலும் சிலவற்றைக் சொல்ல விரும்புவேன்.(தமிழில் பதிவு செய்வது மிகவும் பொறுமையைக் சோதிக்கின்றது. ஆனால் தமிழில் படித்தால்(/அதுவும் நம் பதிவை தமிழில் படிக்க விரும்புகிறார்கள் என்று அறிந்தால்) ஒரு தனி இன்பம் தான்.

சிலேடை : சொல் அமைப்பில் ஒரு சொல்லாக வந்தாலும் இரண்டு (அ) மூன்று பொருளுடன் விளங்கும் கவிதை சிலேடை எனப்படும் !
காளமேகப்புலவரின் கவிதைகளில் சிலேடை எனக்கு மிகவும் பிடிதத ஒன்று. எனெனில், அது மிக எளிதாகவும் (எல்லொரும் புரிந்துகொள்ளலாம்), அவரின் சிந்தனைச் சிறப்பை விளக்கக் கூடியதாகவும் விளங்கும் (Man!! he has a great thinking capability and he could use it effectively in tamil words .I am so impressed and I respect his intellect..Hats off ).

அடுத்த பதிவில் தான் பாருங்களேன்!!!!

Wednesday, January 25, 2006

ஆத்திசூடி - 17

101. வித்தை விரும்பு
கற்பதிலே ஆர்வம் கொள்வாயாக

102. வீடு பெற நில்
நற்கதி அடையும் காரியங்களைச் செய்வாயாக

103. உத்தமனாய் இரு
உலகத்தவருடன் நல்லவனாக நடந்து கொள்

104. ஊருடன் கூடி வாழ்
ஊர்மக்களுடன் ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துவாயாக

105. வெட்டெனப் பேசேல்
வருத்தம் உண்டாகுமாறு கத்தி வெட்டைப் போல பேசாதே

106. வேண்டி வினை செயேல்
உன் நன்மைக்காக வேண்டுமென்றே தீய காரியங்களைச் செய்யாதே

107. வைகறைத் துயில் எழு
அதிகாலையில் எழுந்திரு

108. ஒன்னாரைத் தேறேல்
பகைவர்களை நம்பாதே

109. ஓரம் சொல்லேல்
நேர்மை தவறி ஒரு பக்கம் பேசாதே!!
முற்றும்

Friday, January 20, 2006

ஆத்திசூடி - 16

91. மீதூண் விரும்பேல்
மிகுதியாக உண்ண விரும்பாதே
92. முனைமுகத்து நில்லேல்
போர்/ சண்டை நடக்கும் இடத்தில் முதலில் சென்று நிற்காதே
93. மூர்க்கரோடு இணங்கேல்
முரடர்களோடு சேராதே
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
உனக்குரிய மனைவியோடு மட்டும் வாழ்க்கை நடத்து
95. மேன்மக்கள் சொல் கேள்
நல்லொழுக்கமுள்ள பெரியாரின் சொல்லைக் கேட்பாயாக
96. மை விழியார் மனை அகல்
விலைமாதர் இல்லத்தை விட்டு நீங்குவாயாக
97. மொழிவது அற மொழி
பேசும் சொற்களை சந்தேகம் இல்லாதவாறு பேசுவாயாக
98. மோகத்தை முனி
காம ஆசைகளை விட்டொழிப்பாயாக

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்
உன்னுடைய ஆற்றலை நீயே புகழ்ந்து பேசாதே

100. வாது முற்கூறேல்
வாக்குவாதம் வருவதற்குரிய சொற்களை நீ முன்னால் பேசாதே
தொடரும்..

Monday, January 16, 2006

ஆத்திசூடி - 15

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
உன்னைப் புகழ்ந்தவரை நீயும் போற்றிவாழ்வாயாக
82. பூமி திருத்தி உண்
நீலத்தை பண்படுத்தி பயிரிட்டு வாழ்வாயாக
83. பெரியாரைத் துணைக் கொள்
அறிவாற்றலில் உன்னைவிட சிறந்தவரைகளையே துணையாகக் கொள்வாயாக
84. பேதைமை அகற்று
அறிவற்ற செயல்களை விட்டொழிப்பாயாக

85. பையலோடு இணங்கேல்
சிறுபிள்ளைத்தனம் உள்ளவர்களோடு இணங்காதே
(project madurai online says 'Dont move with Idiots'. But raamasamy pulavar says 'paiyal' as small children. I think paiyal as people with small qualities )

86. பொருடனைப் போற்றி வாழ்
செல்வம் அழிந்து போகாமல் காத்து வாழ்வாயாக

87. போர்த் தொழில் புரியேல்
போர் புரிவதை ஊக்குவிக்காதே

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்

எத்தகைய நிலையிலும் கலக்கம் அடையாதே

89. மாற்றானுக்கு இடம் கொடேல்
பகைவனுக்கு இடம் அளிக்காதே

90. மிகைபடச் சொல்லேல்
உரையாடும் போது எதையும் மிகைப்படுத்திக் கூறாதே/ குற்றம் உண்டாகுமாறு பேசாதே
தொடரும்

Wednesday, January 11, 2006

ஆத்திசூடி - 14

71. நூல் பல கல்

பல விதமான கலைகளையும் கற்பாயாக

72. நெற்பயிர் விளைவு செய்

நெற்பயிரை பயிரிடுவயாக!

73. நேர்பட ஒழுகு

தவறான வழியிலேயே செல்லாமல் நேர்மையான வழியிலே நடப்பாயாக

74. நைவினை நணுகேல்

உன்னையோ பிறரையோ வருத்தக்கூடிய காரியங்களைச் செய்யாதே

75. நொய்ய உரையேல்

இழிவான மொழிகளைப் பேசாதே

76. நோய்க்கு இடம் கொடேல்

நோயுண்டாவதற்கு இடங்கொடுக்காதே

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்

பிறர் இகழ்ந்துரைக்கத்தக்க மொழிகளைப் பேசாதே

78. பாம்பொடு பழகேல்

பாம்பை வளர்த்து அதனுடன் பழகாதே

79. பிழைபடச் சொல்லேல்

பேசுவதில் குற்றம் உண்டாகுமாறு பேசாதே

80. பீடு பெற நில்

பெருமையுண்டாகுமாறு நல்வழியிலே நடப்பாயாக
தொடரும்..

Monday, January 09, 2006

ஆத்திசூடி - 13

61. தெய்வம் இகழேல்
தெய்வத்தை இழிவாகப் பேசுதல் கூடாது

62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
உன்னுடைய நாட்டு மக்களோடு ஒற்றூமையாக வாழ்வாயாக !
63. தையல் சொல் கேளேல்.
பெண்களின் தீய சொற்களைக் கேட்டு நடக்காதே !

64. தொன்மை மறவேல்.
பழமையான ந்ட்பு, உறவு முதலியவைக்ளை மறந்து விடாதே

65. தோற்பன தொடரேல்.

முடிக்கமுடியாத காரியங்களைத் தொடங்காதே
நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி
நன்மையான காரியங்களைத் தொடர்ந்து செய்வாயாக

67. நாடு ஒப்பன செய்
உன்னுடைய நாட்டிலுள்ளோர் ஒத்துக்கொள்ளக் கூடிய காரியங்களையே செய்.

68. நிலையில் பிரியேல்.
உன்னுடைய கொள்கைகளில் இருந்து பின்வாங்காதே
69. நீர் விளையாடேல்.
தண்ணீரிலே விளையாதே

70. நுண்மை நுகரேல்
(நோய் உண்டாக்கத்தக்க) இழிவு பொருளை உண்ணாதே!
தொடரும்..