Thursday, July 02, 2009

வடவரையை -1

சிலப்பதிகாரம்

17. ஆய்ச்சியர் குரவை - முன்னிலைப் பரவல்

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்

கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே

கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை

மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே;


பதவுரை:

வடவரையை - வடப்பகுதியில் உள்ள மேருமலையை

மத்து ஆக்கி - மத்தாகக் கொண்டு

வாசுகியை- வாசுகி என்ற பாம்பை

நாண்(கயிறு) ஆக்கி - கயிறாகக் கொண்டு

கடல்வண்ணன் - கடல் போன்ற (நீலநிற) வண்ணம் கொண்டவன்

பண்டு ஒரு நாள் -பண்டைக் காலத்தில் ஒரு நாள்

கடல்வயிறு- ஆழ்கடலின் நடுப் (உட்)பகுதியினை

கலக்கினையே- கலக்கினாயே (கடைந்தாயே)

கலக்கிய கை- அப்படி கலக்கியவனுடைய கை(களோ)

அசோதையார்- யசோதை தாயார்

கடை கயிற்றாற் - மோர் கடைகின்ற கயிற்றால்

கட்டுண்(ட) கை- கட்டுண்ட கைகளாம்

மலர்க்கமல- தாமரை மலர் (தாங்கிய)

உந்தி(தொப்புள்) யாய் - தொப்பிள் கொண்டவனே

மாயமோ- இதென்ன மாயம் தானோ !!

மருட்கை(வியப்பு) த்தே - வியக்க வைப்பதே !!


பொருளுரை:

வடப்பகுதியில் உள்ள மேருமலையை மத்தாகக் கொண்டு வாசுகி என்ற பாமபினை கயிறாகக் கொண்டு, கடல் போன்ற நீலநிறம் கொண்ட(வனே) பண்டைக் காலத்தில் ஒரு நாள் ஆழ்கடல் நடு (உட்)பகுதியினை கலக்கினாயே! அப்படி கலக்கிய கைகள் யசோதை தாயார் மோர் கடைகின்ற கயிற்றால் கட்டுண்ட கைகளாம்!! தாமரை மலர் தனை தொப்புளில் கொண்டவனே!! இதென்ன மாயம் தானோ.. வியக்க வைப்பதே !!

தொடரும்..


7 comments:

krishnaraj said...

வாழி செண்பகம்!,

நீண்ட நாளாயிற்று உங்கள் தமிழ் படித்து.
உங்களுக்கு நிறைய பொறுமையும் தமிழின்பால் மாறாகாதலும் உள்ளது, இல்லையேல் இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் சொல்லவருமா?
" உந்தி(தொப்பிள்) யாய் - தொப்பிள் கொண்டவனே "
நானறிந்தவரையில் தொப்புள் (அ) கொப்பூழ் என்பதே சரியான வழக்குச் சொல்.
குற்றம் காண்பது எம் நோக்கமல்ல, எனினும் ஐயன்-வள்ளுவன் வாக்கு: 'நண்பரின் ஆசு(குற்றம்)வை இரி(விலக்கல்)த்தல் நல்ல நண்பரின் கடமை' என்பதால்... (ஆசு + இரி + அன் = ஆசிரியன்)
எம் கருத்தில் தங்களுக்கு உடன்பாடில்லையெனில், கூறுங்கள் உங்கள் கருத்தை அறிய ஆவலாகவுள்ளேன்... நானும் பிழை செய்யக்கூடுமல்லவா
இறைமையில் நம்பிக்கையில்லையெனினும் படிக்கலாம் இதை; நல்ல தமிழ், அழகு தமிழ், செந்தமிழ்

அன்பன்,
கிருட்டிண ராசு, ப.
புதுச்சேரி

http://pradje.hi5.com
kirouchenaradje@yahoo.com

Maayaa said...

krishnaraj avargale..
vaanga vaanga..
romba nandri..thoppulnnu nenachu thoppilnnu naan thappa adichiruken..indha maaridhiri sutti kaata makkal indha oorla illaye endru varuthappattadhu undu.. romba sandhosam..

iNayathalathin moolamaa thamizh uraiyaadalgalai paakum bodhu romba sandhoshamaa.. indha type panra kaniniyila thamizhla type panna mudiyala.. mannikkavum..
nandri

krishnaraj said...

வாழி செண்பகலக்குமி !,

krishnaraj avargale..
பெயரைச் சொல்லி அழைக்கத்தானே பெயரிட்டுள்ளனர், அதனால் அவர்களே எனும் மரியாதை(!) பன்மை வேண்டா
vaanga vaanga..
இது வழமையான போலியாயில்லாமல் நேரில் அழைப்பதைப் போன்ற உணர்வு தருகிறது
romba sandhosam..
மகிழ்ச்சி என சொல்லலாமே, நீங்களே சொல்லாவிடில் யார் சொல்லுவார்?
mannikkavum..
பொறுத்தருளவும் இதுதான் தமிழ்ச் சொல்
indha type panra kaniniyila thamizhla type panna mudiyala..
நான் உங்களின் வலைப்பூக்களை(தின மணி - 'கதிர்' மூலம் தமிழ்க்கல்வி குறித்து அறிந்து, வந்து பார்த்து, வியந்து போனேன். முதலில் நீங்கள் கலைத் துறை மாணவரோ என நினைத்தேன், பின்பு தான் தெரிந்தது நீங்கள் அறிவு இயல் பேசும் தமிழச்சியென) படிக்க வந்த காலங்களில் நிறைய வருத்தப்பட்டதுண்டு தமிழில் நமக்கு பின்னூட்டமிட தெரியவில்லையேயென.

நான் தேடி கண்டடைந்த வலை முகவரிகள்:

http://www.islamkalvi.com/web/converter.htm
தமிழில் எழுத வராதவரும் ஆங்கில(உரோமானிய - இலத்தின்) எழுத்துக்களைக்கொண்டு தமிழில் எழுதலாம் யார்/எந்த துணையுமில்லாமல். பார்த்தே புரிந்துக்கொள்ளும் வண்ணம் எளிமையாக உள்ளது.

http://www.google.com/transliterate/indic/Tamil
இதை உரோமானிய( ஆங்கில ) விசை பலகையில் பயிற்சியுள்ளோர் இயல்பாக பயன் படுத்தலாம்

http://www.suratha.com/reader.htm
இங்கு ஒரு குறியீட்டில் அடித்ததை வேறுகுறியீட்டிற்கு (எ.கா. டாம் - யுனிகோட்) மாற்றிக்கொள்ளலாம்.

இவையாவும் வேண்டாமெனில்:

http://www.azhagi.com/
இங்கு மொழி-எழுத்து மாற்றி (transliterate) மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது. இறக்கிக்கொண்டு எப்பொழுது வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்

http://www.ildc.in/tamil/GIST/htm/dictionary.htm
இந்த முகவரிச்சென்று அங்கு கீழேயுள்ள நிறுவு(install) பொத்தானை தட்டி உங்கள் கணிணியில் "இலவசமாகவே ! " இறக்கிக்கொள்ளுங்கள். வெறும் 73MB தான்.
மிக மிக மிக பயனுள்ள அகரமுதலி.(தமிழ் - ஆங்கிலம் & ஆங்கிலம் - தமிழ் இரண்டுமுண்டு)
யாரும் எளிதில் பயன் படுத்தலாம்.


"அசோதையார்- யசோதை தாயார் (ய என்ற எழுத்தில் துவங்குவதில்லை) "
நானறிந்தவரை( ! ) ல, ள, ர, ற இவைதான் மொழி(சொல்) முதல் வாரா
யாழ், யாப்பு, யாக்கை, யாளி, யாய் இவையாவும் நற்றமிழ்ச்சொல்
யாப்பு = செய்யுள்
யாக்கை = உடல் (யாக்கை திரி காதல் சுடர் அன்பே... - 'அய்த எழுத்து' திரைப்படப்பாடல்)
யாளி = உருவத்தில் சிங்கமுகமும் யானை துதிக்கையும் கொண்ட கற்பனை மிருகம் (எசு. இராமகிருட்டிணன் தம் தொகுப்பொன்றில் கோயிலிலுள்ள 'யாளி விளக்கு'களின் அழகை வியந்துள்ளார். கோவிலின் தூண்களிலும் இவைக் காணப்படும்)
யாய் = தாய் (யாயும் = எம் தாய், ஞாயும் = உம் தாய், எம்தை = என் தந்தை, நுந்தை = உன் தந்தை - அண்மையில் மக்கள் தொலைக் காட்சியில் ஈரோடு தமிழன்பன் 'சங்கே முழங்கு' நிகழ்ச்சியில் கூறக்கேட்டது)
ஒவ்வொரு உறவுக்கும் நுட்பமாக ஒரு சொல். நம் மொழியின் பொருள் அடர்த்தியும் செறிவும் வீச்சும் எவ்வளவு அழகு இனிமை.
எழுத எழுத இந்த மூடனுக்கு கண்ணீர் முட்டுகிறது

சரி சரி சரி முடித்துக் கொள்கிறேன்( இலக்கண மரபு படி ஒன்றை மூன்று முறைக்கு மேல் அடுக்கிச் சொல்லக்கூடாது)

பொறுத்து அ ரு ள வு ம் :-)


அன்பன்,
கிருட்டிண ராசு, ப.
புதுச்சேரி

http://pradje.hi5.com
kirouchenaradje@yahoo.com

Maayaa said...

மிக்க நன்றி கிருட்டிணராசு!! அந்த அலுவலகக் கணினியில் தான் தட்டச்சு இல்லை.ஏற்றவும் கூடாது. இருப்பினும் நீங்கள் அளித்துள்ள தளங்களுக்கு மிக்க நன்றி.

ய எனற எழுத்தில் ஏன் துவங்கவில்லை என்று பல முறை யோசித்தேன். நீங்கள் கொடுத்த எடுத்துக்காட்டுகள் அற்புதம். ஆயினும் ஏன் "அ" எனத் தொடங்கியிள்ளார் என்று நீங்கள் விளக்கினால் மிகவும் நன்றாக இருக்கும்.

எங்கெங்கோ தவறு கண்டேன் என்று தான் இங்கு விளக்கம் எழுத வந்தேன். ஆனால் இங்கும் (நான்) தவறான விளக்கங்களைப் பதிவு செய்யாமல் நீங்கள் பார்த்துக் கொண்டால் எனக்கும் நிம்மதி..தமிழுக்கும் தான்!!

நன்றி

krishnaraj said...

மறுமொழிந்தமைக்கு மிக்கமகிழ்ச்சி ! நன்றி, செண்பகலக்குமி,

ஒரு திருத்தம்:
எம்தை = என் தந்தை என்பது தவறு
எந்தை = என் தந்தை என்பதே சரி
எம் பிழை பொறுக்கவும்
பதவுரை விளக்கத்தில் இன்னும் தொப்பிள் என்றேவுள்ளது

ஒரு ஐயம்:
'கணிணி' என்பது தானே படிக்க(உச்சரிக்க) இயல்பாக வரும் அது எப்படி 'கணினி' ஆயிற்று?
உச்சரிப்பு சரியாயிருந்தால் பெருமளவு பிழை தவிற்கலாம் தமிழில். பிறர்ச் சொல்லக்கேட்டது என் பட்டறிவும்(அனுபவம்) அதுதான்.
என் பெயரையும் சிலர் கிருட்டின ராசு என எழுதுவர்.
என் அறிவுக்கு(!) எட்டியவரை கிருட்டிண ராசு என்பதே சரி.

ஒரு விளக்கம்:
யானை = ஆனை இவ்விரண்டுமே தமிழ்ச் சொற்கள் தான்.
ஆனை என்றே மலயாளத்திலும் ஆளப்படுகிறது(எனக்கு மலயாளம் கொஞ்சம்( ! ) எழுத படிக்கத் தெரியும்(!).
நல்ல தமிழ்ச் சொற்கள் மலயாளத்தில் அப்படியேயுள்ளன.

(வடக்கே வேங்கடத்தில் பேசும் தமிழுக்கு 'தெலுங்கு' என்று பெயர்; மலைநாட்டில் பேசும் 'தமிழுக்கு' மலயாளம் என்று பெயர்; கருநாடகத்தில் பேசும் தமிழுக்கு 'கன்னடம்' என்று பெயர் யாவும் ஒன்றே அது தமிழே - பேராசான் மா. நன்னன்)

ஆக என் எண்ணம் 'யசோதையும்', 'அசோதையும்' ஒன்று தான்.

அல்லது

'தளை' தட்டியிருக்கும்.
தளை = செய்யுளில் ஒரு சீரின் ஈற்றசைக்கும் அதனை அடுத்து வரும் சீரின் முதலசைக்கும் உள்ள ஓசை இயைபு(பொருத்தம் / இணக்கம்)

அல்லது

ஒரு வேளை போலியாயிருக்குமோ?
'ய'க்கு 'ச' போலி
எ.கா.
பயக = பசங்க
பயலை = பசலை

இவை போல்...

யான் யாப்பிலக்கணம் அறிந்தானில்லை.


ஒரு செய்தி:

http://www.ildc.in/tamil/GIST/htm/dictionary.htm
இந்த முகவரிக்குச்சென்று அங்கு கீழேயுள்ள நிறுவு(install) பொத்தானை தட்டி உங்கள் கணிணியில் "இலவசமாகவே ! " இறக்கிக்கொள்ளுங்கள். வெறும் 73MB தான்.
மிக மிக மிக பயனுள்ள "அகரமுதலி"(Dictionary) (தமிழ் - ஆங்கிலம் & ஆங்கிலம் - தமிழ் இரண்டுமுண்டு)
யாரும் எளிதில் பயன் படுத்தலாம்.
உங்களின் இப்பணிக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்
கீழுள்ள இந்த விகடனின் முகவரியும் உங்களுக்கு உதவக்கூடும்
http://youthful.vikatan.com/youth/sendhilvelanarticle09072009.asp

கீழுள்ளது எனக்கு வந்த மின்னஞ்சல் உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியாததால்...

HOW SMART IS YOUR RIGHT FOOT?

You have to try this please, it takes 2 seconds.. I could not believe
this!!!
It is from an orthopaedic surgeon...............This will boggle your
mind and you will keep you trying over and over again to see if you can
outsmart your
foot, but, you can't.

It's pre-programmed in your brain!

Without anyone watching you (they will think you are (GOOFY) and while
sitting at your desk in front of your computer, lift your right foot
off the floor and make clockwise circles.
Now, while doing this, draw the number '6' in the air with your right
hand. Your foot will change direction.

I told you so!!! And there's nothing you can do about it!
You and I both know how stupid it is, but before the day is done you
are going to try it again, if you've not already done so.< BR>>
Send it to your friends to frustrate......... them too!

அன்பன்,
கிருட்டிண ராசு, ப.
புதுச்சேரி

http://pradje.hi5.com
kirouchenaradje@yahoo.com

krishnaraj said...

சென்ற காரி(சனி)க்கிழமை பெருமாள் கோயிலில் கல்லில் வெட்டியிருந்த 'நம்மாழ்வார்' அருளிய 'திருவாய் மொழி'யின் 9ஆம் பாடலில் "..... ஆக்கை விடும் பொழுது " எனும் வரியை படிக்கும் பொழுது "யாக்கை", "ஆக்கை" என ஆளப்பட்டிருப்பதைக் காண நேர்ந்தது.
பின் ஞாயிரன்று வழமையாகச் செல்லும் 'உரோமான் ரோலாந்து' நூலகத்தில் 'சிங்கப்பூர் சித்தார்த்தன்' எழுதிய "இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்", நர்மதா பதிப்பகம் - சென்னை, நூலைபுரட்டியதில் ஐயம் தீர்ந்தது(!)
அதாவது... :
இலக்கணத்தில், எழுத்தியலில், போலியில், "மரூஉ இயல்பு வழக்கு" எனும் பிரிவைச்சேர்ந்தது; யசோதை, அசோதையானது.
போலி என்றால் 'போல் இருப்பது' என்று பொருள்
"மரூஉ" என்பது சொற்கள் இலக்கணம் சிதைந்து வழங்குவதாகும். இது இலக்கணப்போலியைப் போல் தொன்றுதொட்டு வழங்கி வருவதன்று. தொடக்கத்தில் இலக்கணம் சிதையாமல் வழங்கிய சொல், இடைக்காலத்திலே இலக்கணம் சிதையப்பெற்று வழங்கத்தொடங்கியதாகும். இப்படி இலக்கணம் சிதையப்பெற்று வழங்கிய சொல் இலக்கியவழக்கிலும் இடம்பெற்றுவிட்டது. எனவே இலக்கண நூலாரும் அதனை எற்றுக்கொண்டு, 'மரூஉ' இயல்பு வழக்கு எனக் குறிப்பிடலாயினர்.
யாக்கை, யாறு, யானை, யார் முதலான சொற்களும் முதல் எழுத்துத் திரிந்து ஆக்கை, ஆறு, ஆனை, ஆர் என்று வழங்குகின்றன.
சிங்கபூர் சிங்கை என்றும், தஞ்சாவூர் தங்சை என்றும் இது போலவே, 'என் தந்தை' என்பது 'எந்தை' என்றும், 'நும் தந்தை' என்பது 'நுந்தை' என்றும் வழங்களாயின.
..... இவை நானெடுத்த குறிப்புகள். உங்களால், நான் பள்ளி நாள்களில்(நாட்கள் சரியல்ல இங்கு) சரியாக படிக்காததை(புரிந்து கொள்ளாததை) படிக்கும் வாய்ப்பு கிட்டியது. நன்றி! வாழ்க! உங்கள் பணி. என்னால் முடியாததை தமிழுக்கு, எவ்வளவோ தொலைவிலிருந்தும், நீங்கள் ஆற்றுகிறீர்கள் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! செண்பகலக்குமி

Maayaa said...

மிக்க நன்றி! உங்கள் சேவைக்கு முன்னால் நாங்கள் ஒன்றும் பெரியதாய் செய்யவில்லை..தற்பொழுது கணிப்பொறி வசதியில்லாமல் இருக்கும் நிலை.ஆகையால் விளக்கமான பதில் எழுத முடியவில்லை..விரைவில் சந்திப்போம்.
நன்றி கிருட்டிணராசு!!