Friday, July 10, 2009

வடவரையை மத்தாக்கி - 4

படர்க்கைப் பரவல் (படர்க்கை(third person)யில் வைத்துப் பரவுதல்)

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;


பதவுரை:
மூவுலகும் - மூன்று உலகும்
ஈரடியான் - இரண்டு அடிகளால்
முறை - முறைப்பட்டு
நிரம்பா - நிரம்பாத (தை)
வகைமுடியத் - முற்றும்(முடிக்கும்)வண்ணம்
தாவிய - தாவிய
சேவடி - சிவந்த திருவடி
சேப்பத்- சிவக்கும் வண்ணம்
தம்பியொடுங்- தம்பியோடு (இலக்குவனோடு)
கான்போந்து -கானகம் புகுந்து
சோவரணும் - சோ என்ற அரணும் (அதில் வாழும் மக்களும்)
போர்மடியத் - போரில் இறக்க
தொல்லிலங்கை - தொன்மையான இலங்கையின்
கட்டு அழித்த - கட்டுக்காவலையும் அழித்த
சேவகன் - வீரன்
சீர் கேளாத - புகழ் கேளாத
செவி என்ன செவியே - காது என்ன காதுகள்?!!
திருமால் சீர் கேளாத - அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத
செவி என்ன செவியே - காது என்ன காதுகள்?!!

பொருளுரை:
மூன்று உலகும் இரண்டு அடிகளால் முறையாய் நிரம்பாததை முடிக்கும் வண்ணம்
தாவி (மகாபலியின் தலையின் மேல் வைத்த) அந்தச் சிவந்த திருவடி, சிவக்கும் வண்ணம் தம்பியோடு கானகம் புகுந்து சோ என்ற அரணும், அதில் வாழும் மக்களும்,போரில் இறக்கும் படி செய்து, தொன்மையான இலங்கையின் கட்டுக்காவலையும் அழித்த வீரனின் புகழ் கேளாத காதுகள் என்ன காதுகள்?!!அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத காது என்ன காதுகள்?!!
தொடரும்..

Wednesday, July 08, 2009

வடவரையை மத்தாக்கி - 3

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே;


பதவுரை:
திரண்டு அமரர் - தேவர்கள் கூடி
தொழுது ஏத்தும் - வணங்கி போற்றும்
திருமால் - திருமால்
நின் செங்கமல - தங்களின் செம்மையான தாமரை மலர்
இரண்டடியான் - இரண்டு அடிகளால்
மூவுலகும் - மூன்று உலகும்
இருள்தீர நடந்தனையே - இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே
நடந்தஅடி - (அப்படி) நடந்த அடி
பஞ்சவர்க்குத் - பஞ்ச பாண்டவர்களுக்கு
தூதாக - (குருவம்ச/அஸ்தினாபுர சபைக்கு)தூதாக
நடந்தஅடி - நடந்து சென்ற அடிகளாம்
மடங்கலாய் - (நர)சிம்மமாய் வந்து
மாறு - பகை
அட்டாய் - அழித்தாய்
மாயமோ - இதென்ன மாயமோ
மருட்கைத்தே - வியப்பு உடையதாய் உள்ளதே!

பொருளுரை:
தேவர்கள் கூடி வணங்கி போற்றும் திருமாலே தங்களின் செம்மையான தாமரை மலர்
இரண்டு அடிகளால் மூன்று உலகும் இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே. அப்படி நடந்த அடி
பஞ்ச பாண்டவர்களுக்காக அஸ்தினாபுர சபைக்கு தூதாக நடந்து சென்ற அடிகளாம்.(நர)சிம்மமாய் வந்து பகை அழித்தாய். இதென்ன மாயமோ!! வியப்பு உடையதாய் உள்ளதே!
தொடரும்..

Monday, July 06, 2009

வடவரையை -2

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த

உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே

உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்

வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே;

பதப்பொருள்:

அறு பொருள்- தீர்ந்த பொருள். அறுதியிடப்பட்ட பொருள். ஐய்யமற்ற பொருள்.

ஐவகை சமயத்தாரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருள் என்றும் கொள்ளலாமாம்.

இவனென்றே- இவன் என்றே

அமரர் கணந்- தேவர் கூட்டம்

தொழுது ஏத்த- வணங்கி புகழ்ந்து பாட/சொல்ல

உறுபசி- நிறைந்த பசி

ஒன்று இன்றியே- ஒன்று இல்லாமலேயே

உலகு அடைய- உலகம் முழுவதையும்

உண்டனையே- உண்டாயே

உண்டவாய்- (அப்படி) உண்ட வாய்

களவினான்- களவி(திருட்டி)னால்

உறிவெண்ணெ- உறியினில் உள்ள வெண்ணை(தனை)

உண்டவாய்- உண்ட வாய்!!!

வண் துழாய்- வண்மையான துளசி

மாலையாய் - மாலையை உடையவனே

மாயமோ - இதன்ன மாயமோ

மருட்கை த்தே - வியப்பு உடையதாயுள்ளதே!

பொருளுரை

தீர்ந்த பொருள் இவன் என்றே தேவர் கூட்டம் வணங்கி புகழ
நிறைந்த பசி ஒன்று இல்லாமலேயே உலகம் முழுவதையும் உண்டாயே!! அப்படி உண்டவாய் களவினால் உறியினில் உள்ள வெண்ணைதனை உண்டவாய்!!!வண்மையான துளசி மாலையை அணிந்தவனே!! இதன்ன மாயமோ !! வியப்பு உடையதாயுள்ளதே!
தொடரும்..

Thursday, July 02, 2009

வடவரையை -1

சிலப்பதிகாரம்

17. ஆய்ச்சியர் குரவை - முன்னிலைப் பரவல்

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்

கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே

கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை

மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே;


பதவுரை:

வடவரையை - வடப்பகுதியில் உள்ள மேருமலையை

மத்து ஆக்கி - மத்தாகக் கொண்டு

வாசுகியை- வாசுகி என்ற பாம்பை

நாண்(கயிறு) ஆக்கி - கயிறாகக் கொண்டு

கடல்வண்ணன் - கடல் போன்ற (நீலநிற) வண்ணம் கொண்டவன்

பண்டு ஒரு நாள் -பண்டைக் காலத்தில் ஒரு நாள்

கடல்வயிறு- ஆழ்கடலின் நடுப் (உட்)பகுதியினை

கலக்கினையே- கலக்கினாயே (கடைந்தாயே)

கலக்கிய கை- அப்படி கலக்கியவனுடைய கை(களோ)

அசோதையார்- யசோதை தாயார்

கடை கயிற்றாற் - மோர் கடைகின்ற கயிற்றால்

கட்டுண்(ட) கை- கட்டுண்ட கைகளாம்

மலர்க்கமல- தாமரை மலர் (தாங்கிய)

உந்தி(தொப்புள்) யாய் - தொப்பிள் கொண்டவனே

மாயமோ- இதென்ன மாயம் தானோ !!

மருட்கை(வியப்பு) த்தே - வியக்க வைப்பதே !!


பொருளுரை:

வடப்பகுதியில் உள்ள மேருமலையை மத்தாகக் கொண்டு வாசுகி என்ற பாமபினை கயிறாகக் கொண்டு, கடல் போன்ற நீலநிறம் கொண்ட(வனே) பண்டைக் காலத்தில் ஒரு நாள் ஆழ்கடல் நடு (உட்)பகுதியினை கலக்கினாயே! அப்படி கலக்கிய கைகள் யசோதை தாயார் மோர் கடைகின்ற கயிற்றால் கட்டுண்ட கைகளாம்!! தாமரை மலர் தனை தொப்புளில் கொண்டவனே!! இதென்ன மாயம் தானோ.. வியக்க வைப்பதே !!

தொடரும்..


Wednesday, July 01, 2009

வடவரையை மத்தாக்கி..பதம் பொருள் விளக்கம்

அன்புடையீர்,
நம்மில் பலரும் "வடவரையை மத்தாக்கி.." எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாள் பாடிக் கேட்டு அகம் மகிழ்ந்திருப்போம். இன்று வழக்கம் போல் நானும் அந்தப் பாடலைக் கேட்கையில் கவிதையின் அழகு இசையின் இனிமையையும் விஞ்சி நின்றது. பாடலில் பொருளை கவனிக்க, என்னையும் அறியாமல் அப்படி ஒரு ஈர்ப்பு என்னுள் வந்தது. அதன் காரணமாக ஒவ்வொரு பதத்தின் அழகையும் கவனிக்க விழைந்தேன்..ஆனால் ஆங்காங்கே சில இடங்களில் எனக்குப் பொருள் விளங்கவில்லை. இணையத்தளத்தில் பொருள் தேட விழைந்தேன். எத்தனையோ தளங்களில் பொருள் விளக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை படிக்க துவங்கையதில் துக்கம் என் தொண்டையை அடைத்தது. இவ்வளவு அழகான பாடலில் எனக்குத் தெரிந்த இடங்களிலேயே தவறான விளக்கங்கள். அந்தோ பரிதாபம்!! தெரியாதவற்றிற்கு பொருள் கொள்ள முடியாமல் தவித்தேன். பொருளுக்குத் தான் இந்த அவல நிலையென்றால் சொற்களே பல தளங்களில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில பாடகர்களும் சில இடங்களில் சொற்களை வதைக்கிறார்கள். பல இடங்களில் தேடிய பிறகு,Tamil Virtual University போன்ற இடங்களில் சரியான பொருள் கண்டேன்..இருப்பினும் எல்லா வரிகளையும், அனைவரும் பார்க்கும் வசதி (public access) இல்லை. மேலும், பதவுரை எங்கும் இல்லை. விளக்கம் அறியா பதங்களை குறித்துக் கொண்டு அகராதியில் பொருள் தேடி, அதனை நம்பகமான தளங்களில் உள்ள பொருளுரையுடன் ஒப்பிட்டு வைத்துள்ளேன். இங்கு நாளை முதல் பதிவு செய்ய உள்ளேன். அனைவரும் பதப்பொருள் அறிந்து இப்பாடலைக் கேட்டால், அதன் சுவையே தனி..எனக்கு இதைக் கேட்கும் போது அவ்வப்போது திருவாசகத்தின் "புற்றில் வாழ் அரவம்.." பாடல் நினைவுக்கு வருகிறது !! இன்று இங்கு பாடலைக் கேளுங்கள்.