Friday, June 16, 2006

விநாயகர் முருகர் சிவபெருமான்

சென்னி முக மாறுளதால் சேர்க்கரமுன் னாலுகையால்
இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்
கண்ணுறுத லானும் கணபதியும் செவ்வேளும்
எண்ணரனு நேரா வரே!!

விநாயகர்

சென்னி முகம் மாறுளதால் - தலையும் முகமும் உடலமைப்புக்கு மாறுபட்டுள்ளதால்
சேர்க்கரம் முன் னாலுகையால்- கரமான துதிக்கை முன் பக்கம் உள்ளதால்
இந்நிலத்திற் கோடொன்று உருக்கையால்- இவ்வுலகில் ஒற்றைக் கொம்பு உள்ளவராய் அமைந்தவராய்
மன்னு குளக் கண் உருதலானும் - நிலைபெற்ற நிவேதனமாக வெல்லம் உள்ளதாலும்
கணபதியும் செவ்வேளும் எண்ணரனு நேரா வரே!! - கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!

முருகன்

சென்னி முகம் ஆறுளதால்- முடுயும் முகமும் ஆறு உள்ளதால்
சேர்க்கர முன்னாலுகையால்- கரங்களோ (முன் நாங்கு= பன்னிரண்டு) பன்னிரண்டு உள்ளதால்
இந்நிலத்திற் கோடு ஒன் றிருக்கையில்- இவ்வுலகில் குன்றமே பொருந்தியிருக்கும் இடமாக இருப்பதாலும்
மன்னு குளக் கண் உறுத லானும் - நிலைபெற்ற சரவணப் பொய்கையில் (குளத்தின் கண்) அவதரித்ததாலும்
கணபதியும் செவ்வேளும் எண்ணரனு நேரா வரே!! - கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!


சிவபெருமான்

சென்னி முகம் ஆறுளதால் - சிரசினிடத்தே கங்கை ஆறு உள்ளதாலும்
சேர்க்கரமுன் னாலுகையால் - முன்புறத்தே சேறும் கைகள் நான்கு உள்ளதாலும்
இந்நிலத்திற் கோடொன் றிருக்கையில் - இவ்வுலகில் மலைமுடியான கைலாச பர்வதம் என்ற மலையில் இருப்பதாலும்
மன்னுகுளக் கண்ணுறுத லானும் - நிலைபெற்ற நெற்றிக் கண்ணைப் பெற்றிருப்பதாலும்
கணபதியும் செவ்வேளும்எண்ணரனு நேரா வரே!! -கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!