Sunday, May 21, 2006

பாம்புக்கும் எள்ளுக்கும்

ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் -ஓடிமண்டை
பற்றிப் பரபரெனும் பாரிற் பிண்ணாகுமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது


பாம்பு
ஆடிக் குடத்தடையும் - படமெடுத்து ஆடிய பின்னே குடத்தில் அடையும்
ஆடும்போதே இரையும் - ஆடும் போது 'ஸ்' என்று இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் - குடத்தை மூடித்திறந்தால் முகத்தை எட்டிக் காட்டும்
ஓடிமண்டைபற்றிப் பரபரெனும் - விரைந்து அதன் தலையைப் பற்றிக் கொண்டால் பரபரவென சுற்றிக் கொள்ளும்
பாரிற் பிண்ணாகுமுண்டாம் - உலகில் பிளவு பட்ட நாக்கை உடையதாயிருக்கும்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது - (இதனால்) உள்ளே அடைத்த பாம்பும் எள் என்று சொல்லுக

எள்
ஆடிக் குடத்தடையும் - செக்கில் ஆடி எண்ணையாய் குடத்தில் அடையும்
ஆடும்போதே இரையும் - செக்கில் ஆடும் போதே இரைச்சல் போடும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் - மூடியைத் திறந்தால் எண்ணையைப் பார்ப்பவரின் முகத்தை தெளிவாகக் காட்டும்
ஓடிமண்டை பற்றிப் பரபரெனும் - விரைய மண்டையில் தேய்த்துக் கொண்டால் பரபரவென குளிர்ச்சி தரும்
பாரிற் பிண்ணாகுமுண்டாம் - உலகிலே பிண்ணாக்கும் அதனிடத்தே உண்டாகும்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது - (இதனால்) உள்ளே அடைத்த பாம்பும் எள் என்று சொல்லுக

தொடரும்..

Saturday, May 13, 2006

கண்ணாடியும் அரசனும்

யாவர்க்கும் ரஞ்சனை செய்து, யாவர்க்கும் அவ்வவராய்
பாவனையாய், தீது அகலக் பார்த்தலால் - மேவும்
எதிரியைத் தன்னுள்ளாக்கி, ஏற்ற ரசத்தால்
சதிருறறால், ஆடி அரசாம்


கண்ணாடி:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து- அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கி
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் - யாருக்கும் அவரவர்களாகவே தெரிந்து
தீது அகலக் பார்த்தலால் - தீமை இல்லாது மங்கலப் பொருளாகப் பார்ப்பதால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி - தன்னை பார்க்கும் எதிர் நிற்பவரை தன்னுள் ஆக்கிக் கொண்டு காட்டி
ஏற்ற ரசத்தால் சதிருறறால - தன் பின்னே ஏற்றப் பட்டிருக்கும் ரசத்தால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் - கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

அரசன்:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து - எல்லா மக்களுக்கு இன்பம் தந்து
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் - எவருக்கும் அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து
தீது அகலக் பார்த்தலால் - தீமை அகற்றி நன்மை அளிக்க முற்படுதலால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி - தன்னை அணுகும் எதிரியை வென்று தன்னுள்ளாக்கி
ஏற்ற ரசத்தால் சதிருறறால் - மேல் கொண்ட நவரசப் பொருள்களால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் - கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

Sunday, May 07, 2006

வைக்கோலும் மதயானையும்

வாரிக் கள்த்தடிக்கும் வந்துபின் கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல் மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலுமால் யானையாம்


வைக்கோல்
வாரிக் கள்த்தடிக்கும் - அறுவடை செய்வோரால் வாரிக்கொணர்ந்து களத்துமேட்டில் அடிக்கப்படும்
வந்துபின் கோட்டைபுகும் - அது பின் கோட்டைக்குள்ளே சேரும்
போரிற் சிறந்து பொலிவாகும் - பெரிய வைக்கோல் போர்களாக சிறப்புற்று அழகாய் விளங்கும்

மதயானை
வாரிக் கள்த்தடிக்கும் - பகைவர்களைத் துதிக்கையினாலே வாரி போர்க்களத்தில் அடித்துக் கொல்லும்
வந்துபின் கோட்டைபுகும் - பின்னே பகயரசரின் கோட்டைக்குள் புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - இவ்வாறாக போர்த்துரையிலே சிறந்து மேன்மையுடையதாய் விளங்கும்

சீருற்ற - சிறப்புற்ற
செக்கோல் மேனித் திருமலைரா யன் - செந்நிறமான மேனியுடைய
வரையில் - மலைச்சாரலிடத்தில்
வைக்கோலுமால் யானை - வைக்கோலும் மதயானை
யாம் - எவ்வாறு எனில்

தொடரும்..