



மேலுள்ள படங்களைப் பாருங்கள். இது தாய்லந்து நாட்டு பேங்காக் நகரத்தின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் உள்ள ஒரு கலை உருவம் (structure). இப்பாடலுக்குப் பொருந்தும் வண்ணம் அற்புதமாக உள்ளது.
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;
பதவுரை:
மடந்தாழும் -மடம் தாழும் - மடமை(அறியாமை) தங்கும்
நெஞ்சத்துக் -நெஞ்சம் கொண்ட
கஞ்சனார் -கம்சனின்
வஞ்சம் -சூழ்ச்சிகளை
கடந்தானை -முறியடித்தவனை
நூற்றுவர்பால் -நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில்
நாற்றிசையும் -நாங்கு திசைகளிலும் (உள்ளவர்கள்)
போற்றப் -புகழ
படர்ந்து ஆரணம் -சென்று வேதங்கள்
முழங்கப் -ஒலிக்க
பஞ்சவர்க்குத் தூது -பஞ்ச பாண்டவர்களுக்கு தூதாக
நடந்தானை - நடந்து சென்றவனை
ஏத்தாத -புகழ்ந்து பாடாத (துதிக்காத)
நாவென்ன நாவே - நாக்கும் ஒரு நாக்காகுமா!!
நாராயணா வென்னா -நாராயணா என்று சொல்லாத
நாவென்ன நாவே -நாக்கும் ஒரு நாக்காகுமா!!
பொருளுரை: அறியாமை தங்கும் நெஞ்சம் கொண்ட கம்சனின் சூழ்ச்சிகளை முறியடித்தவனை, நூற்றுக்கணக்கானவர்களுடன் சென்று, நாங்கு திசைகளிலும் உள்ளவர்கள் புகழ, வேதங்கள் ஒலிக்க, பஞ்ச பாண்டவர்களுக்கு தூதாக நடந்து சென்றவனை புகழ்ந்து பாடாத நாக்கும் ஒரு நாக்காகுமா!! நாராயணா என்று சொல்லாத நாக்கும் ஒரு நாக்காகுமா!!
முற்றும்