Friday, July 10, 2009

வடவரையை மத்தாக்கி - 4

படர்க்கைப் பரவல் (படர்க்கை(third person)யில் வைத்துப் பரவுதல்)

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;


பதவுரை:
மூவுலகும் - மூன்று உலகும்
ஈரடியான் - இரண்டு அடிகளால்
முறை - முறைப்பட்டு
நிரம்பா - நிரம்பாத (தை)
வகைமுடியத் - முற்றும்(முடிக்கும்)வண்ணம்
தாவிய - தாவிய
சேவடி - சிவந்த திருவடி
சேப்பத்- சிவக்கும் வண்ணம்
தம்பியொடுங்- தம்பியோடு (இலக்குவனோடு)
கான்போந்து -கானகம் புகுந்து
சோவரணும் - சோ என்ற அரணும் (அதில் வாழும் மக்களும்)
போர்மடியத் - போரில் இறக்க
தொல்லிலங்கை - தொன்மையான இலங்கையின்
கட்டு அழித்த - கட்டுக்காவலையும் அழித்த
சேவகன் - வீரன்
சீர் கேளாத - புகழ் கேளாத
செவி என்ன செவியே - காது என்ன காதுகள்?!!
திருமால் சீர் கேளாத - அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத
செவி என்ன செவியே - காது என்ன காதுகள்?!!

பொருளுரை:
மூன்று உலகும் இரண்டு அடிகளால் முறையாய் நிரம்பாததை முடிக்கும் வண்ணம்
தாவி (மகாபலியின் தலையின் மேல் வைத்த) அந்தச் சிவந்த திருவடி, சிவக்கும் வண்ணம் தம்பியோடு கானகம் புகுந்து சோ என்ற அரணும், அதில் வாழும் மக்களும்,போரில் இறக்கும் படி செய்து, தொன்மையான இலங்கையின் கட்டுக்காவலையும் அழித்த வீரனின் புகழ் கேளாத காதுகள் என்ன காதுகள்?!!அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத காது என்ன காதுகள்?!!
தொடரும்..

No comments: