Monday, July 06, 2009

வடவரையை -2

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த

உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே

உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்

வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே;

பதப்பொருள்:

அறு பொருள்- தீர்ந்த பொருள். அறுதியிடப்பட்ட பொருள். ஐய்யமற்ற பொருள்.

ஐவகை சமயத்தாரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருள் என்றும் கொள்ளலாமாம்.

இவனென்றே- இவன் என்றே

அமரர் கணந்- தேவர் கூட்டம்

தொழுது ஏத்த- வணங்கி புகழ்ந்து பாட/சொல்ல

உறுபசி- நிறைந்த பசி

ஒன்று இன்றியே- ஒன்று இல்லாமலேயே

உலகு அடைய- உலகம் முழுவதையும்

உண்டனையே- உண்டாயே

உண்டவாய்- (அப்படி) உண்ட வாய்

களவினான்- களவி(திருட்டி)னால்

உறிவெண்ணெ- உறியினில் உள்ள வெண்ணை(தனை)

உண்டவாய்- உண்ட வாய்!!!

வண் துழாய்- வண்மையான துளசி

மாலையாய் - மாலையை உடையவனே

மாயமோ - இதன்ன மாயமோ

மருட்கை த்தே - வியப்பு உடையதாயுள்ளதே!

பொருளுரை

தீர்ந்த பொருள் இவன் என்றே தேவர் கூட்டம் வணங்கி புகழ
நிறைந்த பசி ஒன்று இல்லாமலேயே உலகம் முழுவதையும் உண்டாயே!! அப்படி உண்டவாய் களவினால் உறியினில் உள்ள வெண்ணைதனை உண்டவாய்!!!வண்மையான துளசி மாலையை அணிந்தவனே!! இதன்ன மாயமோ !! வியப்பு உடையதாயுள்ளதே!
தொடரும்..

No comments: