Wednesday, July 08, 2009

வடவரையை மத்தாக்கி - 3

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே;


பதவுரை:
திரண்டு அமரர் - தேவர்கள் கூடி
தொழுது ஏத்தும் - வணங்கி போற்றும்
திருமால் - திருமால்
நின் செங்கமல - தங்களின் செம்மையான தாமரை மலர்
இரண்டடியான் - இரண்டு அடிகளால்
மூவுலகும் - மூன்று உலகும்
இருள்தீர நடந்தனையே - இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே
நடந்தஅடி - (அப்படி) நடந்த அடி
பஞ்சவர்க்குத் - பஞ்ச பாண்டவர்களுக்கு
தூதாக - (குருவம்ச/அஸ்தினாபுர சபைக்கு)தூதாக
நடந்தஅடி - நடந்து சென்ற அடிகளாம்
மடங்கலாய் - (நர)சிம்மமாய் வந்து
மாறு - பகை
அட்டாய் - அழித்தாய்
மாயமோ - இதென்ன மாயமோ
மருட்கைத்தே - வியப்பு உடையதாய் உள்ளதே!

பொருளுரை:
தேவர்கள் கூடி வணங்கி போற்றும் திருமாலே தங்களின் செம்மையான தாமரை மலர்
இரண்டு அடிகளால் மூன்று உலகும் இருள் நீங்கும் வண்ணம் நடந்தாயே. அப்படி நடந்த அடி
பஞ்ச பாண்டவர்களுக்காக அஸ்தினாபுர சபைக்கு தூதாக நடந்து சென்ற அடிகளாம்.(நர)சிம்மமாய் வந்து பகை அழித்தாய். இதென்ன மாயமோ!! வியப்பு உடையதாய் உள்ளதே!
தொடரும்..

No comments: