Monday, August 03, 2009

வடவரையை மத்தாக்கி - 5


பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும்
கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே

பதவுரை:
பெரியவனை - அனைவரைக் காட்டிலும் பெரியவனை
மாயவனைப் - மாயங்கள் செய்பவனை
பேருலக மெல்லாம் - பெரிய உலகங்களெல்லாம்
விரிகமல - விரிக்கின்ற தாமரை மலர் ( மேலுள்ள பிரம்மாவினை)
உந்தியுடை - வயிற்றில் கொண்டவனை
விண்ணவனைக் - வானவனை
கண்ணும் - கண்களும்
திருவடியும் - திருவடிகளும்
கையும் - கைகளும்
திருவாயும் - திருவாயும்
செய்ய - சிவக்க
கரியவனைக் - கரிய நிறத்தவனை
காணாத - காணாமல் உள்ள
கண்ணென்ண கண்ணே - கண்களுமென்ன கண்களா!!
கண்ணிமைத்துக் - கண்களினை இமைத்து
காண்பார் தம் - காண்கின்றவர்களின்
கண்ணென்ண கண்ணே - கண்களென்ன கண்களா!!

பொருளுரை:
அனைவரைக் காட்டிலும் பெரியவனை, மாயங்கள் செய்பவனை, பெரிய உலகங்களெல்லாம் உருவாக்கும் தாமரை மலர் மேலுள்ள பிரம்மாவினை வயிற்றினில் கொண்டவனை..வானவனை.. கண்களும், திருவடிகளும், கைகளும், திருவாயும் சிவக்க, கரிய நிறத்தவனைக் காணாமல் இருக்கும் கண்களுமென்ன கண்களா!!(கண் கொட்டாமல் காணவேண்டிய அழகினை) கண்களினை இமைத்து காண்பவர்களின் கண்களென்ன கண்களா!!

தொடரும்..

2 comments:

Unknown said...

பதவுரை, பொருளுரை இரண்டிலும் 'ப்ரம்மா' என ஆண்டுள்ளீரே.
'பிரம்மா' என்றல்லவா இருத்தல் வேண்டும்.

'மெய் மொழி முதல் வாரா'
நீவிர் அறியாததா !!!, அம்மையீரே
யான் செப்பவும் வேண்டுமோ?... :-)

Maayaa said...

கண்டறிந்து சொன்னதற்கு மிக்க நன்றி கிருட்டிணராசு !! என் கவனக்குறைவு :(