Thursday, January 10, 2008

தொறடு போடாதே, எழுத்திலக்கணம் மற்றும் மரபுக்கவிதைப் பயிற்சி!

என்னங்க! இப்படி தொறடு போட்டு சண்டைக்கு இழுக்கறீங்களே? - அட.. உங்கள சொல்லலீங்க வாசகர்களே! பொதுவா சில சண்டைக்கோழிகளைப் பார்த்து சாதுவான மக்கள் இப்படி சொல்லுவாங்கன்னு சொல்ல வந்தேன்!!
அதுக்குப்பின்னாடியும் ஒரு கதை இருக்கு தெரியுமா!ஆரம்பிச்சுட்டாய்யா.. கதை சொல்லறேன்று வந்துடுவா :)- இப்படி சலிச்சுகிட்டே படிக்காதீங்க. மக்களே!! 'கும்'முன்னு, நல்லா நிமிர்ந்து உட்கார்ந்து.. ஒரு காபிய கையில எடுத்துட்டு.. வந்து உற்சாகமா கேளுங்க?! அடுத்த வாரத்துலேயிருந்து யாரு உங்களுக்கு தினமும் சரித்திரக் கதை சொல்லப்போறாங்க?!! (அப்பாடி..நல்ல வேளை..ஒரு வாரம்தான்னு நினைக்கறீங்களா!!ஹீ..ஹீ.. என் தளங்கள்ல அப்பப்போ சொல்வேன்..)

சும்மா ஒரு கதை கேளுங்க!!

தமிழில் மகாபாரதம் எழுதிய வில்லிபுத்தூரார் தன் அகந்தைச்செருக்கால மத்தவங்கள மதிக்கத் தவறினார். அதனால மத்த சிறந்த தமிழறிஞர்களை வாதத்துக்கு கூப்பிடுவார். கூப்பிடும் போதே ஒரு 'கண்சிஷன்' போட்டுடுவார். இந்த காய் பறிக்கும் தொறடு இருக்குல.. அத எடுத்து எதிராளியோட காதுல மாட்டி வெச்சேதான் வாதத்துக்கு கூப்பிடுவாராம். எதிராளி தோத்தவுடனே தொறட புடிச்சு இழுத்து அவர் காதை அறுப்பாராம். என்ன கொடுமை சரவணன் இது :)-

ஆனா பாருங்க!! 'வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலுண்டு'ன்ற மாதிரி ('பாபா' ரஜினி ஸ்டைலுல) வந்தாரு நம்ம அருணகிரிநாதர். இவர் 'கந்தர் அந்தாதி' சொல்ல சொல்ல வில்லிபுத்துரார் பொருள் எழுதணும்..இது தான் போட்டி. 54 வது பாட்டுக்கு வரும்போது வில்லிபுத்தூராருக்கு அர்த்தம் புரியல. அதனால அவர் தோத்து போனார். ஆனா, அருணகிரிநாதர் அதற்காக இவர் காத அறுக்காம, இனிமேல் மற்றவர் காதுகளை அறுக்கக் கூடாதுன்னு கேட்டுக் கொண்டாராம். அந்த பாட்ட இங்க அழகா போட்டிருக்காங்க (right click செய்து) பாருங்க!! தலைநகரம் படத்துல வடிவேல் சொல்லற மாதிரி(இது தான் அழகுல மயங்கி விழுறதா:)-) இது தான் 'தொறடு போட்டு சண்டைக்கு இழுக்கறதா' ?? ன்னு யோசிககறீங்களா!! ஹீ..ஹீ

சரி, இலக்கணம்.. இலக்கணம்..டிங்..டிங்..டிங்..நாம் 7 நாளுல முடிக்கணுமே.. வாங்க போகலாம்!

இலக்கணம் ஒரு கண்ணோட்டம் - 5

சொல்லிலக்கணம்: இது தாங்க நிறைய இருக்கு..வினை, வேற்றுமை, எல்லாம் பார்த்தோமா!! 23.ஆகுபெயர்ன்னா என்னன்னு பார்ப்போம்.

"உலகம் உருண்டை" "உலகம் சிரிக்கும்"
இதுல முதல்ல 'உலகம்' உண்மையாவே உலகத்தை தான் குறிச்சுது.
ஆனா அடுத்துல 'உலகம் என்னவோ உலகத்துல உள்ள மக்களைக் குறிச்சுது. இது தான் ஆகுபெயர் (Transferred noun).

ஒரு சொல் அதனோடு தொடர்பு கொள்ளாமல், வேறொரு பொருளுக்கு தொடர்பு கொண்டால் அது ஆகுபெயர். இது 6 வகைப்படும்.

1. பொருள் ஆகுபெயர் சா: தாமரை முகம் (பெண்ணைக் குறிப்பது)
2. இட ஆகுபெயர் சா: மதுரை திரண்டது (மக்களைக் குறிப்பது)
3. கால ஆகுபெயர் சா: கார் அறுத்தான் (நெல்லைக் குறிப்பது)
4. சினை ஆகுபெயர் சா: வெற்றிலை நட்டான் (வெற்றிலைக் கொடியைக் குறிக்கிறது)
5. குண ஆகுபெயர் சா: வெள்ளை அடித்தான் (வெள்ளைச் சுண்ணாம்பைக் குறிக்கிறது)
6. தொழில் ஆகுபெயர் சா: வற்றல் உண்டான் (வற்ற வைத்த வடகத்தைக் குறிக்கிறது)

பெயர்ச்சொல், வினைச்சொல் வகையெல்லாம் பார்த்தோம். இடைச்சொல்ல பார்ப்போமா!! 24. இடைச்சொல்-அதன் வகைகள்: இது தாங்க மனப்பாடம் பண்ண நான் கஷ்டப்பட்ட பகுதி. பிடிக்கலன்னாலும் பேசித்தானே ஆகணும்.. எவை எல்லாம் இடைச்சொல்லா வரும்? பார்ப்போம். பெயருக்கும் வினைக்கும் இடைப்பட்டு வருவது இடைச்சொல்.

1. வேற்றுமை உருபுகள் (Cases): ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி- இத நம்ம பார்த்துட்டோம். சும்மா ஒரு சான்று: ராமனுக்கு வலித்தது

2. விகுதி (Endings) அன், ஆன், அல், தல், வை. சா: வா+த்(ந்)+த்+அன்+அன் -வந்தனன்.

3.சாரியை: அன், ஆன், அத்து, அம். சா: வந்தனன் (வா+த்(ந்)+த்+அன்+அன்)

4. உவமை உருபுகள் -உவமைக்காக உபயோகப்படுத்தப் படும் உருபுகள்: போன்ற, புரைய, மான, அன்ன, ஒத்த. சா: மயிலொத்த பெண்

5. ஏ, ஓ - விளி. சா:கடவுளே, அவனோ

6. ஒடு, தெய் என்ற இசை நிறைப்பதற்காக வருவன. சா:அதனொடு

7. மற்று, கொல், அம்ம - அசை நிறைகள்.

8.ஒலி, அச்சம், நிறைவு - இவற்றை குறிப்பால் உணர்த்துவன.

அப்பாடா.. முடிஞ்சு போச்சு.. சரி, உரிச்சொல்ல பார்ப்போம் 25. உரிச்சொல் - பெயர், வினைகளின் குணத்தைக் குறிப்பது உரிச்சொல். இது ரெண்டு வகைங்க.

1. ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்: பல சொற்கள் ஒரே பொருளைத் தரும் சா: களபம்,வேழம்,மாதங்கம், கைம்மா, கம்பமா,களிறு - எல்லாம் யானையைக் குறிக்கும்

2. பல குணம் தழுவிய ஒரு உரிச்சொல்: ஒரே சொல் பல பொருளைத் தரும் சா: வேழம்-யானை/கரும்பு என்று இரண்டையும் குறிக்கும்; கடி-கூர்மை, மணம, அச்சம் என்று பல பொருளைக் குறிக்கும்.

அதெல்லாம் சரி, நம்ம ஒரு சொல்ல பிரிச்சா என்னென்ன இருக்குன்னே பார்க்கலயே !!

26. பதம் என்றால் என்னங்க?

ஒரு எழுத்து தனித்தோ இல்லை மற்ற எழுத்தோடு சேர்ந்தோ பொருள் தந்தால் அதுக்குப் பேர் பதம். அது 2 வகை - 1. பகுபதம் 2. பகாபதம்.

பகுபதம்: எழுத்த பிரிச்ச பிறகும் பொருள் இருந்தா பகுபதம் சா:படித்தவன் . இதை பிரிச்சா 'படி'ன்னு ஒரு பொருளுள்ள வார்த்தை இருக்கு

பகாபதம்: பொருள் இல்லைன்னா அது பகாபதம் சா: கல், மண்.

27. பகுபதத்துல என்னென்ன இருக்குங்க?

ஒரு சான்றோட பார்ப்போம் சா: வந்தான்=வா+ த்(ந்)+த்+அன்
வா - பகுதி (முதலில் வரும்) ; அன் - விகுதி (கடைசியில் வரும்)
த் - இடைநிலை(இடையில் வரும்)
த் - சந்தி (இது பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். சில சமயம் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில வரும்). இங்க, ' த்' ஆக மாறி இருக்கு-இது சந்தி விகாரம்.. இதப்பத்தி கவலைப்படாதீங்க.. அப்புறம் பாத்துகலாம்.

28. சாரியை அப்ப்டின்னு ஒண்ணு சில சமயம் வருமே அது என்ன??இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவில் வருவது. சா: வந்தனன் வா+த்+த் +அன்+ அன். எதெல்லாம் சாரியயையாக வரும் அன்,ஆன், இன்,அல், அத்து, அற்று, அம்

29. விகாரம்ன்னா என்ன? 'வா'எனபது 'வ'வாக மாறி இருப்பது விகாரம். 'ந்' என்பது 'த்' ஆக மாறி இருப்பது சந்தி விகாரம். இத அப்புறம் பார்ப்போம்.

30. இடைநிலைனு ஒண்ண பார்த்தோமே! அது என்ன?

தமிழை, தமிழ் பேசாத மக்களுக்குச் சொல்லைத்தர முயலும் போது தாங்க இதோட அருமை தெரியுது.. ஏன் தெரியுமா.. Lexingtonla ஒரு குழந்தை வந்து என்ன கேட்டுச்சு..."எதிரகாலம் காட்டும் போது, 'உண்+ப்+ஆன் - உண்பான்'ல 'ப்'' வருது...ஆனா, போ+வ்+ஆன்- போவான்ல 'வ்' வருதே!! ஏன்??". உண்மையா, அப்போ எனக்கு இடைநிலையோட விதிகள் ஞாபகமே இல்ல.. அது அப்படித்தான்னு சொல்லணும் போல வந்தது.. அப்புறம் புத்தகத்தில தேடினா, இடைநிலை காலத்திற்கேற்ப எப்படி மாறும்ன்னு படிச்சு ஞாபகப் படுத்திகிட்டேன்.. அந்த விதி என்னன்னு பார்ப்போம்!!

இறந்த கால இடைநிலை: த், ட், ற், இன்
சா: செய்+ த்+ஆன் - செய்தான்;
உண்+ட்+ஆன் - உண்டான்;
தின்+ற்+ ஆன் - தின்றான்;
உறங்கு+ இன்+ஆன் - உறங்கினான்

நிகழ் கால இடைநிலை: கிறு, கின்று, ஆநின்று (இதெல்லாம் நம்ம மனப்பாடம் பண்ணி இருக்கோம். ஞாபகம் இருக்கா)
சா: நட+கிறு +ஆன் - நடக்கிறான்;
நட+கின்று+ஆன் - நடக்கின்றான்;
நட+ஆநின்று+ ஆன் - நடவாநின்றான்

எதிர்கால இடைநிலை: ப், வ்
சா: உண்+ப்+ஆன் - உண்பான்.
போ+வ்+ ஆன் - போவான்.

ஒரு வழியா சொல் இலக்கணத்த முடிக்கப் போறோம்முங்க. இன்னும் கொஞ்சம் நாளைக்குப் பார்க்கலாம்.

தெரிந்தால் சொல்லுங்களேன் - 5

உங்களயும் என்னைப் போன்ற சாதாரணமானவராக நினைத்துக் கேட்கும் கேள்வி இது !! அறிஞராக நீங்கள் இருந்தாலும் பதில் சொல்லுங்க!!

இத சொல்லுங்க!! நம்ம விழுந்து விழுந்து மனப்பாடம் பண்ணி ஒரு இலக்கணம் படிக்கறோம். ஆனா, அதெல்லாம் கவிதையோ, இலக்கியமோ எழுதப்போத மாட்டேங்குது.. பல்வேறு துறைக்கு நம்மளே நம்மள தத்து கொடுத்துடறோம்.. நீ மட்டும் என்னனு கேக்காதீங்க..நானும் தான்..ஆனா உணர்ச்சிகளை கவிதையா பார்க்கிற ஆசை இருப்பதால நமக்குள்ள சில பேர் ஆர்வத்தோட கவிதை எழுதறோம்..அதாங்க..புதுக்கவிதை...வரிய மடிச்சு மடிச்சு எழுதறோம்.. நான் புதுக்க்கவிதைக்கு எதிர்ப்பு சொல்பவள் இல்ல.. ஆங்கிலத்தில சொன்னா 'I am thinking aloud'-மனம் விட்டு பேசறேன்...கேள்விக்கு வரேன் இருங்க..

நம்ம எல்லாம் மரபுக் கவிதை எழுதத் தெரிஞ்ச பிறகு, பாமர மக்களுக்காக பாரதியார், பாரதிதாசன் மாதிரி 'புதுக்கவிதை' எழுதறவங்க இல்ல.. ஒத்துகறீங்களா!! கேள்விகள் என்னன்னா..

1. இப்படி நமக்கு சுலபமாக்கப்பட்ட (புதுக்)கவிதைக்கு ஏதாவது விதிமுறை/இலக்கணம் இருக்கா? இருக்குன்னு பார்த்தேன்..நல்ல பதிவு ஒண்ணுல..ஆனால் என்னென்னன்னு சொல்லல அவங்க!! எங்கன்னு மறந்து போச்சு!!

2. எனக்கு புதுக்கவிதை எழுதுவதுல வெறுப்பு இல்லீங்க..ஆனா பாருங்க, மேலே உள்ள அருணகிரிநாதர் பாட்டு மாதிரி பாட்ட எல்லாம் பாருங்க.. பக்கத்தில 'என் கவிதைகள்'ன்னு என்னோட பக்கத்த பாருங்க...ரெண்டையும் கவிதைன்னு சொல்லிக்க மனசாட்சி ஒத்துக்க மாட்டேங்குதுங்க!! 'மகாபாரதத்தில் மங்காத்தா' மாதிரி நான் அவங்க காலத்துக்கு போனாலோ, அவங்க நம்ம காலத்துக்கு வந்தாலோ என்ன காரித் துப்புவாங்க..மேலும், இவ்வளவு 'இலக்கணம்' எல்லாம் படிச்சு கவிதை எழுதறவன் என்ன 'கேனயா'?. எனக்கு இத நெனச்சா ரொம்ப கவலை தாங்க..நீங்க இதப் பத்தி என்ன நினைக்கறீங்க?

3. சரி, இந்த நிலைய உயர்த்த தமிழ் முனைவர்கள், அறிஞர்கள் 12ஆம் வகுப்பு வரை தமிழ் படிச்சவங்களுக்கு ஏதாவது 'Online'/Long Distance/On campus' மரபுகவிதைப்பயிற்சி, யாப்பிலக்கணப் பயிற்சி/ கல்வி எதாவது சொல்லித் தராங்களா? தெரியுமா!!

கவிதைக்கு எல்லாம் வகுப்பு வெக்கமுடியுமான்னு கேப்பீங்க..ஆனா பாருங்க. நம்ம மொழி அழியக்கூடாதுன்னா எதாவது செய்யணுங்க!! (சிவப்பதிகாரம் கிளைமாக்ஸ் மாதிரி சொல்லறேன்..ஹீ..ஹீ)

7 comments:

Geetha Sambasivam said...

அது சரி, நட்சத்திரமா ஆயிருக்கீங்க, சீனியர்னு நினைச்சால், கவிதை சொல்லிக் கொடுக்கலாமான்னு கேட்டுட்டு இருக்கீங்களே?
வெ.பா.வ. ஜீவ்ஸ் பத்தித் தெரியாது? எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசானே அவர்தான், ஹிஹிஹி, கணினியில் தமிழ்த் தட்டச்சுக்குத் திணறிட்டு இருந்தப்போ வேலை மெனக்கெட்டு வந்து சொல்லிக் கொடுத்துட்டுப் போனார். இப்போ நம்ம சிஷ்யகேடிங்க எல்லாம் அவரை மும்முரமாத் தேடறதாலே தலை மறைவா இருக்கிறதாக் கேள்வி! :P

Geetha Sambasivam said...

சாதாரணக் கவிதைக்கே "கற்பனை வளம்" இல்லாத என்னை மாதிரி ஆளுங்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுப்பீங்க?

Iyappan Krishnan said...

//இப்போ நம்ம சிஷ்யகேடிங்க எல்லாம் அவரை மும்முரமாத் தேடறதாலே தலை மறைவா இருக்கிறதாக் கேள்வி! :P//



அடடா தானைத்தலைவலி அவர்களே நான் இங்கன தானே இருக்கேன். நீங்க நம்ம போட்டோ ப்ளாக் பக்கம் வரதே இல்லையா நீங்க..

பிரியா :

இலக்கணத்தின் மீதான உங்களின் ஆர்வம் பாராட்டத்தக்கது. நானும் சிலது ஆர்வக்கோளாரில ஆரம்பிச்சு.. நேரமின்மையால் தொடராமல் போன
பதிவுகள்

http://kaduveli.blogspot.com/ -- இலக்கணத்திற்கெனவே ஆரம்பித்தேன். நேரம் தான் கிடைக்காமல் அப்படியே தொங்களில் விட்டுவிட்டேன் .

அடுத்தது வெண்பாவிற்கான பதிவு :

http://payananggal.blogspot.com/ -- தொடரவேண்டும்.

Iyappan Krishnan said...

சொல்ல மறந்துட்டேன். நீங்கள் தந்த சுட்டி http://www.chennailibrary.com/muruga/kandaranthathi.html
இருக்கும் பாடல்கள் யமகம் வகையைச் சார்ந்தவை. சாதாரணமாகவே அருணகிரியாரின் பல பாடல்கள்.. பல்லையும் நாக்கையும் பதம் பார்க்க நிற்கும். இதில் யமகம் சேர்ந்தால் ?

சொல்லவே வேண்டாம்...

R. Prabhu said...

மிக மிக அருமை ப்ரியா இந்த அருணகிரிநாதர் கதை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் முழு விபரம் தெரியாது தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் மொழியை காப்பாதனும்னா தமிழன் தமிழனா இருக்கனும். ஒரு விளம்பரத்துக்கோ, இல்லை நானும் புது கவிதை எழுதினால் தமிழை காப்பாத்த முடியும் என்பதுவோ இருக்ககூடாது. அதை அவன் வீட்ல ஆரம்பிக்க வேண்டும், தன் பிள்ளைகளுக்கும், தன்னை சேர்ந்தவர்களுக்கும் தமிழை தமிழ் கலாசாரத்தை பத்தி சொல்லணும் தானும் தெரிஞ்சுக்க முற்படனும்.

அது போக புது கவிதைக்கு சில விதிகள் இருக்குன்னு நான் UG படிச்சபோது தமிழ் பாடத்துல வந்தது, முடிந்தால் தேடி பார்த்து சொல்லுறேன். ஆனால் அந்த விதிகள் சங்க கால கவிதைகள் மாதிரி இலக்கணம் கடுமையா இருக்காது

Maayaa said...

கீதா அவர்களே
இப்ப தான் ஜீவிஸ்யை தெரிஞ்சுகிட்டேன். நன்றி!! ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொடுத்தா ஒண்ணும் கஷ்மா இருக்காதுன்னு நினைக்கறேன்..ஜீவிஸ்ச கேப்போம்!!

ஜீவ்ஸ்,
நன்றி! நிச்சயமா போய்ப் பாக்கறேன்.
யமகமா?? அப்படீன்னா?

பிரபு,
உண்மை தான்..நானும் அதையே தான் நினைச்சேன்.. சரி,நீங்க பார்த்து சொல்லுங்க!!

Geetha Sambasivam said...

ப்ரியா, இங்கே "ஜீவ்ஸ்" ரொம்ப நாளா வெண்பா வடிக்கச் சொல்லிக் கொடுக்கிறார். இவர் வேறே, இவர் இளைஞர்.

"ஜீவி" என்ற எழுத்தாளரும் இருக்கிறார் வலை உலகிலே, ரொம்பப் பெரியவர். அவரும் உங்க பதிவில் பின்னூட்டம் போட்டிருக்கிறார்.

"ஜீவா வெங்கட்ராமன்" இவரும் வந்து போயிருக்கிறார் என நினைக்கிறேன். இவர் அட்லாண்டாவில் இருக்கிறார். நீங்க ஜீவிஸ் என்று குழப்பமாய்ப் பதில் சொல்லி இருக்கீங்க. மூன்று வேறு வேறு நபர்கள். இதில் எனக்குத் தெரிந்து வெண்பா சொல்லிக் கொடுப்பவர் ஜீவ்ஸ் மட்டுமே. இப்போ ஃபோட்டோ ப்ளாகில் எழுதுகிறார்.