Tuesday, January 08, 2008

பிள்ளைத்தமிழில் பௌதிகம், சொல்லிலக்கணம் மற்றும் எத்தனை ஒளவை?

என் அருமை வாசகர்களே!!

சும்மா கேளுங்க ஒரு கதை !!

நீங்க புத்தகங்கள் வாங்க அளித்த முகவரிகளுக்கு ரொம்ப நன்றி! நிறைய இலக்கிய புத்தகங்கள் இணையத்துல கிடச்சாலும் அதற்கு உரையில்லாம/ அர்த்தம் புரியாம இருப்பதால 'பதவுரையோட கிடைக்கும் புத்தககங்கள' வாங்க முயற்சிக்கிறேன். என்ன செய்ய.. அந்த அளவுக்கு தான் எனக்கு அர்த்தம் புரியுது..ஹூம்…எங்க தமிழ் வாத்தியார் ஒரு 6 ஆம் வகுப்பு பிள்ளைக்கு கூட அவ்வளோ அழகா புரியும்படி இலக்கியம் சொல்லிக் கொடுப்பார். வாத்தியார்ன்னவுடனே அவர் சொன்ன கதை ஒண்ணு ஞாபகம் வருது. தமிழ் இலக்கியத்துலேயே எவ்வளோ பௌதிகம் Physics சொல்லியிருக்காங்கங்கிறதுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொன்னார். குமரகுருபரர் பற்றிய கதை அது..

குமரகுருபரர் ஒரு முறை மதுரைக்கு வந்தபோது மீனாட்சியம்மையோட அழக பார்த்து அவள குழந்தை வடிவில நினைச்சு 'பிள்ளைத்தமிழ்' வகையில பாட்டுக்கள் எழுதினாராம். அன்றிரவு, பாண்டியநாட்டு ராஜாவோட கனவுல அம்மனே வந்து, 'குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எழுதியிருக்கார்’ன்னு சொல்லி ‘அதை என் கோவிலில அரங்கேற்று'ன்னு சொன்னாளாம். அதன்படி ராஜா குமரகுருபரர வேண்டிக் கொள்ள, குமரகுருபரரும் மீனட்சியம்மன் கோவிலில சபையைக் கூட்டி அரங்கேற்றினார். சபையில அர்ச்சகரின் குழ்ந்தையா அம்மனே வந்து அரசர் மடியில செல்லமா உட்கார்ந்து பாடல்கள கேட்டாளாம். அவர் பாடி முடித்தவுடன், அரசனின் கழுத்திலிருந்து மாலையை எடுத்து குமரகுருபரர் கழுத்துல போட்டுடு கோவிலிக்குள்ள ஓடிப்போய் மறைஞ்சுட்டாங்கன்னு கதை போகுது..

இதுல பௌதிகம் எங்கன்னா,’மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்’ல குமரகுருபரர், 'ஊஞ்சல்' பகுதியில மீனாட்சியம்மை ஊஞ்சல் ஆடும் அழகை விவரிக்கும் பொழுது வருது. வேகமாக ஊஞ்சல் ஆடும் போது, அம்மனோட காதில் உள்ள கம்மல்/தொங்கட்டானும் அதிவேகமாக முன்னும் பின்னும் ஆடியதாம். அதுவும் தொங்கட்டான் ஊஞ்சலைவிட எவ்வளோ அதிகமா வேகமா ஆடியதுன்னு சொல்லியிருக்காராம். இதத்தான் பௌதிகத்துல, பெண்டுலத்தின் ஆட்டம் அதன் நீளத்தையும் பொருத்ததுன்னு சொல்லறோம் (Oscillation of the pendulum depends on its length).

'ஆமாம்ல'ன்னு 6 ஆம் வகுப்புல வியக்கும்படி கேட்டேன். அது இன்னிவரை மனசுல தங்கிடுச்சு!! ஆனா, என் தமிழறிவு எவ்வளவுன்னா, இணையத்தளத்துல ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ இருந்தும், ‘ஊஞ்சல்’ பருவத்தை கண்டெடுத்தும், 'இத சொல்வது எந்த பாட்டு?'ன்னு கண்டுபிடிக்கத் தெரியல...ஹூ..ம்..இதுல நான் இலக்கணம் பத்தி பேசறேன். விதி யார விட்டது:)-

இலக்கணம் ஒரு கண்ணோட்டம் – 3

எழுத்திலக்கணத்துல கொஞ்சம் பாக்கி இருக்கே!! அத முடிச்சுடுவோமா?!!
6.முதலெழுத்து, சார்பெழுத்து தவிர தமிழெழுத்த வேற எப்படி வகைப்படுத்தலாம்?

அ. ‘அவன், இது, அவ்வீடு’ அப்டீன்னு சுட்டிக் காட்ட உதவும் ‘அ, இ, உ’ சுட்டெழுத்துன்னு சொல்வோம். ‘அந்த, இந்த’ ன்னு திரிஞ்சா சுட்டுத்திரிபு.

ஆ. ‘எ,யா,ஆ, ஓ,ஏ’ என்பதைப் பயன்படுத்தி கேள்வி கேட்பதால அது வினாஎழுத்து. சா: து?. யார்?, அறிஞனா?, யானோ?,ன்?, இவனே செய்தான்?

இ. 'அதுவா?!' ன்னு சுட்டிக்கேட்டா அது சுட்டுவினா.

ஈ. ஒரே இனமாக அ-ஆ; இ-ஈ, உ-ஊ - இப்படி வருவது இனவெழுத்து. மெய்யெழுத்துல க்-ங்; ச்,ஞ், ட்-ண்..இது போல இனவெழுத்தா வகைப்படுத்தியிருக்காங்க

உ. செய்யுளில் ஒரு எழுத்துக்கு பதில் இன்னொரு எழுத்து வந்து பொருள் மாறலன்னா அதுக்கு பேரு 'போலி'. சா: 1. 'மயல்'லுக்கு பதிலா 'மையல்'ன்னு சொன்னா அதுக்கு போலி.2. அறம்-அறன் 3. அரசு-அரைசு
இதெல்லாம் நமக்கு முன்பே தெரிஞ்சது தான். எழுத்திலக்கணம் அவ்ளோ தாங்கோ!!

சொல் இலக்கணம்

நம்ம சொல் இலக்கணத்துக்கு வந்துட்டோம்.

7. சொல் (Etymololgy) எத்தனை வகைங்க?

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்

8. 'பெயர்ச்சொல்'ன்னா? பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல்(Noun).
இது 6 வகைங்க.பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினை/உறுப்புப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்.சா: ப்ரியா(பொருள்), சென்னை(இடம்), காலை(காலம்), கால்(சினை), இனிப்பு(பண்பு), கெடுதல்(தொழில்)

9. 'வினைச்சொல்'ன்னா? ஒரு பொருளின் வினையை(action)க் குறிக்கும் சொல் வினைச்சொல்(Verb). சா: கொடுத்தான், வளரும், நகர்கின்றன

10. இடைச்சொல்ன்னா? தனித்து இயங்காமல் பெயருடனோ,வினையுடனோ இடமாகக் கொண்டு வரும் சொல் இடைச்சொல்(Particles).சா: அவனைக் கண்டேன்- ஐ; சென்றானா? - ஆ; திருவாரூரின்-இன்

11. உரிச்சொல்ன்னா? தனித்து பொருள்படாமல், பெயர் வினைகளின் குணத்தை உணர்த்த வரும் சொல் உரிச்சொல் (Qualifying words).சா: உறுபுகழ் (உறு-மிகுதி); சாலப் பேசினான் (சால- மிகுதி)

அது சரி, அப்போ 12. பெயரெச்சம், வினையெச்சம்னு சொல்றாங்களே அது என்ன?

'முற்று'ன்னா- முழுமையான வருவது. சா: படித்தான், நடந்தான்
'எச்சம்'ன்னா - முழுமையா பொருள் இல்லாம வருவது. சா: படித்த, நல்ல,ஓடி,மெல்ல

இப்போ இந்த 'எச்ச'த்துக்குப் பின்னாடி பெயர்ச்சொல் வந்தா பெயரெச்சம்.
சா: படித்த ராமன், விடிந்த காலை, நல்ல வீடு

எச்சத்துக்கு பின்னாடி வினைச்சொல் வந்தா வினையெச்சம்
சா: ஓடி வந்தான், மெல்ல நடந்தான்.

13. இதுல 'ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்/வினையெச்சம்'ன்னா என்னன்னு தோழர்கள் ஏதேதோ கேட்டு பயமுறுத்துவாங்களே!! அது என்ன தெரியுமா?

சா: உண்ணா குதிரை

பெயரெச்சம்- உண்ட குதிரை
எதிர்மறை(Opposite)-உண்ணாத குதிரை
ஈறு கெட்ட - கடைசி எழுத்து போன
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்- உண்ணா குதிரை

அதே தாங்க!! வினையெச்சமா வந்தா -உண்ணா வந்தான்.

14. அப்போ 'வினையாலணையும் பெயர்' ன்னா என்ன? எங்கயோ கேட்ட மாறி இருக்கா!!

ஒரு சொல் அதனோட வினையை (actiona) குறிக்காம வினை செய்தவனைக் குறித்தால் (அ) வேற்றுமை உருபை கூட சேர்த்துகிட்டு வந்தால் அதற்குப் பெயர் வினையாலணையும் பெயர்.சா: ஆடியவள், பாடியவளுக்கு. ஆடி- ஆட்டத்த குறிக்குது. ஆடியவள் – அந்த பெண்ணைக் குறிக்குது. சரி..இத்தோட இப்போ நிறுத்துவோம்

தெரிந்தால் சொல்லுங்களேன் - 3

அந்த காலத்துல ரெண்டு ஒளவையார் இருந்தாங்களாமே? ஒருத்தங்க அதியமான் காலம் இன்னொருத்தங்க. கம்பர் காலமாமே! அப்படியா? எங்கயோ படிச்சேன்!! ஒளவையார் அதியமான் முதல் பொய்யாமொழிப்புலவர் காலம் வரை இருந்தாராமே!! எந்த ஒளவை?? அவர் வாழ்ந்த காலம் எது?? ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க..இன்னொரு கேள்வி..திருக்குறளை எதோ ஒரு காரணத்துக்காக (திருவள்ளுவர் கீழ் ஜாதி..அது மாறி எதோ silly யான காரணத்தால்) தமிழ்ச்சங்கம் எற்றுக் கொள்ள வில்லை. ஆனால், ஒளவையார் மதுரை பொற்றாமரைக் குளத்தில் நின்று "சங்கப்பலகையே, நீ இதை ஏற்றுக்கொள்"ன்னு பாட்டுபாடி அதை ஏற்றுக்கொள்ள வச்சாங்களாமே..இதெல்லாம் காது வழியா வந்த செய்தி!! உண்மைச் செய்தி அதுவா?..உங்களுக்குத் தெரியுமா??

5 comments:

manjoorraja said...

இந்த வாரம் தமிழ்மணம் நட்சத்திரமாக மிளிர்வதற்கு வாழ்த்துகள்

R. Prabhu said...

அவ்வையார் திருவள்ளுவர் திருக்குறளை தமிழ் சங்கத்தில் இயற்ற உதவியது உண்மை. இதை பற்றி என் blog-ல் முதலே ஒரு போஸ்ட் போட்டு இருகேன் பாருங்கள் ப்ளீஸ்

Maayaa said...

அப்படியா வேதா!! நீங்க விடை தெரிஞ்சா சொல்லுங்க.. இலக்கணம் படிக்க வருவதற்கு ரொம்ப நன்றி!!

நன்றி மன்சூர் ராசா அவர்களே!!

ப்ரபு,
லிங்கு குடுங்களேன்..என்னிக்கோ படிச்ச மாறி தான் இருக்கு.. ஆனா ஒண்ணும் ஞாபகம் இல்ல..தினம் வாங்க!!

குமரன் (Kumaran) said...

ஆகா. திரும்பவும் 'அருமை வாசகர்களே'வா? ஏனுங்க. நாங்க எல்லாருமே பதிவுல எழுதுறவங்க. அப்ப நாங்க எல்லாரும் எழுத்தாளர்கள் தானே. அதென்ன எங்களை எல்லாம் வாசகர்களேன்னு கூப்புடுறீங்க. நல்லா இல்லை. ஆமாம். சொல்லிட்டேன்.

சுட்டெழுத்து தெரியும். சுடுமேன்னு கவனிக்காம இருந்தேன். சுட்டுத் திரிபுன்னு இன்னொன்னு இருக்கு தெரியாம போச்சு அதனால. :-)

இனவெழுத்தா? அதனால என்ன பயனுங்க?

கெடுதல் தானே தொழில். கெடுத்தல் இல்லையே. நல்லதா போச்சு. :-)

ஆகா நல்ல வேளை கொடுத்தான்னு எ.க. சொன்னீங்க கெடுத்தான்னு சொல்லாம. :-)

இடைச்சொல்லுக்கு சா:ன்னு நீங்க கொடுத்திருக்கிறது எல்லாம் வேற்றுமை உருபுன்னு படிச்ச மாதிரி இருக்கே.

சால, உறு, தவ, நனி, கூர், கழின்னு உரிச்சொற்களைப் படிச்ச நினைவு இருக்கு. இவை போக வேறெதுவும் உரிச்சொற்கள் இருக்கா?

பரவாயில்லையே கூறுகெட்ட...சாரி...சாரி..ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தைப் பத்தி நல்லா சொல்லியிருக்கீங்களே. அருமை.

ஒளவையார் ஒன்னு ரெண்டு இல்லைங்க நிறைய பேரு இருந்த மாதிரி தான் தோணுது. சங்கராசாரியார், ஜீயர்ன்னு பரம்பரையா வர்றவங்க எல்லாரையும் சொல்றோமில்லை. அது போல இருக்குமோன்னு தோணுது. அகத்தியர், வள்ளுவர் கூட அப்படி இருக்கலாம். திருக்குறளைக் கூட ஒரே ஒருவர் எழுதலை. நிறைய வள்ளுவர்கள் தொடர்ந்து எழுதுனாங்க. அதனால தான் எதிரெதிரான கருத்துகளும் இருக்குன்னு சொல்றாங்க. இதுக்கெல்லாம் உறுதியான தரவுகள் எங்கிட்ட இல்லைங்க. நானும் படிச்சது, கேட்டது எல்லாத்தையும் வச்சு போற போக்குல சொல்றேன். அம்புட்டுத் தான்.

இலக்கணப்பாடம் ரொம்ப நல்லா இருக்குங்க ப்ரியா. உடனே வந்து படிக்காட்டியும் நேரம் கிடைக்கிறப்ப வந்து படிக்கிறேன். ஆனா இன்னொரு தடவை என்னை வாசகன்னு சொல்லி மாட்டிக்காதீங்க. அம்புட்டுத் தான் சொல்லுவேன். :-)

Maayaa said...

குமரன் அவரகளே!!

நீங்க இத வாசிக்காம நான் வாசகர்களேன்னு கூப்பிட்டது எப்படித் தெரியும்:)-
படிக்கிறவங்க வாசகர் தானே!!அவங்க எழுதினாலும் இங்க படிக்கத் தானே செய்யறாங்க..இங்க இது verb, noun இல்லையே!!

அத விடுங்க!! நீங்க இங்க வந்து விலாவாரியா படித்து என்ன ஊக்குவிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க!!

இனவெழுத்தா?? உயிரளபெடை யில ஒரு எழுத்தோட இனவெழுத்து அது கூட வரும்ன்னு சொல்ல உதவுதே!!
'அ'வுக்கு 'ஆ'இனவெழுத்து.. அது மாதிரி தான்!!