Monday, August 10, 2009

வடவரையை மத்தாக்கி - 6






மேலுள்ள படங்களைப் பாருங்கள். இது தாய்லந்து நாட்டு பேங்காக் நகரத்தின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் உள்ள ஒரு கலை உருவம் (structure). இப்பாடலுக்குப் பொருந்தும் வண்ணம் அற்புதமாக உள்ளது.

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே

நாராயணா வென்னா நாவென்ன நாவே;

பதவுரை:
மடந்தாழும் -மடம் தாழும் - மடமை(அறியாமை) தங்கும்
நெஞ்சத்துக் -நெஞ்சம் கொண்ட
கஞ்சனார் -கம்சனின்
வஞ்சம் -சூழ்ச்சிகளை
கடந்தானை -முறியடித்தவனை
நூற்றுவர்பால் -நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில்
நாற்றிசையும் -நாங்கு திசைகளிலும் (உள்ளவர்கள்)
போற்றப் -புகழ
படர்ந்து ஆரணம் -சென்று வேதங்கள்
முழங்கப் -ஒலிக்க
பஞ்சவர்க்குத் தூது -பஞ்ச பாண்டவர்களுக்கு தூதாக
நடந்தானை - நடந்து சென்றவனை
ஏத்தாத -புகழ்ந்து பாடாத (துதிக்காத)
நாவென்ன நாவே - நாக்கும் ஒரு நாக்காகுமா!!
நாராயணா வென்னா -நாராயணா என்று சொல்லாத
நாவென்ன நாவே -நாக்கும் ஒரு நாக்காகுமா!!

பொருளுரை: அறியாமை தங்கும் நெஞ்சம் கொண்ட கம்சனின் சூழ்ச்சிகளை முறியடித்தவனை, நூற்றுக்கணக்கானவர்களுடன் சென்று, நாங்கு திசைகளிலும் உள்ளவர்கள் புகழ, வேதங்கள் ஒலிக்க, பஞ்ச பாண்டவர்களுக்கு தூதாக நடந்து சென்றவனை புகழ்ந்து பாடாத நாக்கும் ஒரு நாக்காகுமா!! நாராயணா என்று சொல்லாத நாக்கும் ஒரு நாக்காகுமா!!
முற்றும்

5 comments:

Unknown said...

" நாராயணா என்று சோல்லாத "
சிறு திருத்தம் 'சொல்லாத' என்றிருத்தல் வேண்டும்.

அதுபோகட்டும்...

முற்றுமா... ! ?
ஏன்?
பின்னூட்டமில்லாததாலா?

கோமதி அரசு said...

நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நவென்ன நாவே


நாராயணா மந்திரத்தை நாவினிக்க

சொல்லுவோம்.

Maayaa said...

பாட்டு முடிந்தது.. வெறொன்றுமில்லை..ஏற்கனவே தொடங்கிய திருப்பாவையை தொடரணும்..வெட்ககேடு என்னவென்றால் திருப்பாவை இன்னும் மனப்பாடமாகத் தெரியாது..அதுனால பாட்டையும் படிக்கணும்..அப்புறம் பொருளையும் தான்

நிச்சயமாக சொல்வோம் கோமதி அரசு அவர்களே!!

Unknown said...

நன்று, இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.
புகழ்ப்பெற்ற திரையிசை பாடகர் பாலசுப்பிரமணி ஒருமுறை சொன்னார், "எனக்கு நாட்டு பண்(தேசிய கீதம்) கூட பார்க்காமல் பாடத்தெரியாது" என்று.
ஆக, மொழியின் மேல் காதலும் ஆளுமையும் தான் தேவை.
இது என் எண்ணம் :-)

பாலா said...

ஆகா! நல்ல படங்கள். அருமையான சிலம்பிலிருந்து ஒரு செம்மையான செய்யுளை எடுத்து அதற்கு திறம்பட பொருளும் கூறியுள்ளீர்கள். இந்த பிளாக் சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்ட்டடிருப்பது வருந்த்ததக்கது. பெரும் திறமையை மறைத்துவைத்தல் தகாது! தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி, தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பெண் புலவர்களின் மீது ஒளி வீசும் பாங்கு.