Sunday, May 21, 2006

பாம்புக்கும் எள்ளுக்கும்

ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் -ஓடிமண்டை
பற்றிப் பரபரெனும் பாரிற் பிண்ணாகுமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது


பாம்பு
ஆடிக் குடத்தடையும் - படமெடுத்து ஆடிய பின்னே குடத்தில் அடையும்
ஆடும்போதே இரையும் - ஆடும் போது 'ஸ்' என்று இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் - குடத்தை மூடித்திறந்தால் முகத்தை எட்டிக் காட்டும்
ஓடிமண்டைபற்றிப் பரபரெனும் - விரைந்து அதன் தலையைப் பற்றிக் கொண்டால் பரபரவென சுற்றிக் கொள்ளும்
பாரிற் பிண்ணாகுமுண்டாம் - உலகில் பிளவு பட்ட நாக்கை உடையதாயிருக்கும்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது - (இதனால்) உள்ளே அடைத்த பாம்பும் எள் என்று சொல்லுக

எள்
ஆடிக் குடத்தடையும் - செக்கில் ஆடி எண்ணையாய் குடத்தில் அடையும்
ஆடும்போதே இரையும் - செக்கில் ஆடும் போதே இரைச்சல் போடும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் - மூடியைத் திறந்தால் எண்ணையைப் பார்ப்பவரின் முகத்தை தெளிவாகக் காட்டும்
ஓடிமண்டை பற்றிப் பரபரெனும் - விரைய மண்டையில் தேய்த்துக் கொண்டால் பரபரவென குளிர்ச்சி தரும்
பாரிற் பிண்ணாகுமுண்டாம் - உலகிலே பிண்ணாக்கும் அதனிடத்தே உண்டாகும்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது - (இதனால்) உள்ளே அடைத்த பாம்பும் எள் என்று சொல்லுக

தொடரும்..

Saturday, May 13, 2006

கண்ணாடியும் அரசனும்

யாவர்க்கும் ரஞ்சனை செய்து, யாவர்க்கும் அவ்வவராய்
பாவனையாய், தீது அகலக் பார்த்தலால் - மேவும்
எதிரியைத் தன்னுள்ளாக்கி, ஏற்ற ரசத்தால்
சதிருறறால், ஆடி அரசாம்


கண்ணாடி:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து- அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கி
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் - யாருக்கும் அவரவர்களாகவே தெரிந்து
தீது அகலக் பார்த்தலால் - தீமை இல்லாது மங்கலப் பொருளாகப் பார்ப்பதால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி - தன்னை பார்க்கும் எதிர் நிற்பவரை தன்னுள் ஆக்கிக் கொண்டு காட்டி
ஏற்ற ரசத்தால் சதிருறறால - தன் பின்னே ஏற்றப் பட்டிருக்கும் ரசத்தால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் - கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

அரசன்:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து - எல்லா மக்களுக்கு இன்பம் தந்து
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் - எவருக்கும் அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து
தீது அகலக் பார்த்தலால் - தீமை அகற்றி நன்மை அளிக்க முற்படுதலால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி - தன்னை அணுகும் எதிரியை வென்று தன்னுள்ளாக்கி
ஏற்ற ரசத்தால் சதிருறறால் - மேல் கொண்ட நவரசப் பொருள்களால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் - கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

Sunday, May 07, 2006

வைக்கோலும் மதயானையும்

வாரிக் கள்த்தடிக்கும் வந்துபின் கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல் மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலுமால் யானையாம்


வைக்கோல்
வாரிக் கள்த்தடிக்கும் - அறுவடை செய்வோரால் வாரிக்கொணர்ந்து களத்துமேட்டில் அடிக்கப்படும்
வந்துபின் கோட்டைபுகும் - அது பின் கோட்டைக்குள்ளே சேரும்
போரிற் சிறந்து பொலிவாகும் - பெரிய வைக்கோல் போர்களாக சிறப்புற்று அழகாய் விளங்கும்

மதயானை
வாரிக் கள்த்தடிக்கும் - பகைவர்களைத் துதிக்கையினாலே வாரி போர்க்களத்தில் அடித்துக் கொல்லும்
வந்துபின் கோட்டைபுகும் - பின்னே பகயரசரின் கோட்டைக்குள் புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - இவ்வாறாக போர்த்துரையிலே சிறந்து மேன்மையுடையதாய் விளங்கும்

சீருற்ற - சிறப்புற்ற
செக்கோல் மேனித் திருமலைரா யன் - செந்நிறமான மேனியுடைய
வரையில் - மலைச்சாரலிடத்தில்
வைக்கோலுமால் யானை - வைக்கோலும் மதயானை
யாம் - எவ்வாறு எனில்

தொடரும்..

Sunday, March 05, 2006

நாய்க்கும் தேங்காய்க்கும்

ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காயது இல்லா திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் நேர் செப்பு!!


சேடியே -தோழியே
தீங்காயது இல்லா திருமலைராயன் வரையில் - தீமையில்லாத திருமலைராயன் எல்லைக்குட்பட்ட நாட்டில்
தேங்காயும் நாயும் நேர் செப்பு- தேங்காயும் நாயையும் ஒப்பிடலாம் (எப்ப்டியென்றால்)!!

தேங்காய்:
ஓடும் இருக்கும்- தனக்குள் ஓட்டை உடையது!
அதனுள்வாய் வெளுத்திருக்கும் - உள்ளே வெண்மையாய் தேங்காயைக் கொண்டிருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - அனைவாராலும் விரும்பப்படும் குலையாய் தொங்குவதற்கும் அது கோணாது

நாய்:
ஓடும் - சிலசமயம் ஓடும்
இருக்கும்- சிலசமயம் இருந்த இடத்தில் நிற்கும்
அதனுள்வாய் வெளுத்திருக்கும் - அதன் வாயில் உட்புறம் வெண்மையாய் இருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - அதற்கு விருப்பமான குரைத்தல் செய்வதிலே அது வெட்கப்படாது (ஓயாது குரைக்கும்)

Monday, February 27, 2006

பாம்புக்கும் எலுமிச்சைக்கும்

பாம்புக்கும் எலுமிச்சம் பழத்துக்கும்:
முன்னுரை (Introduction): காளமேகப் புலவர் திருமலைராயன் எனற சிறப்பு வாய்ந்த மன்னனிடம் சென்று பாடிப் பரிசு பெறலாம் என்று எண்ணி அவரைக் காண வருகிறார். வழியில் வளமான அவன் நகரத்தைப் பார்த்து பூரித்து அரண்மனை வந்தடைந்தார். அரண்மனையில் திருமலைராயனோ தன் அரண்மனைக் கவிஞர்களின் (தண்டிகைப்புலவர் ம்ற்றும் பலர்) வயப்பட்டு காளமேகப்புலவரை சரியாக மதிக்கவில்லை. இருக்கை அளிக்காமல் இருக்க காளமேகப்புலவர் சரஸ்வதியைத் துதிக்க அரசனின் சிம்மாசனம் வள்ர்ந்து புலவருக்கு இடமளித்தாக வரலாறு. அதையும் பொருட்படுத்தாது புலவரோ தன் கவித்திற்னைக் காட்டி அவையை ஆச்சர்யப்படுத்தி அவர்களின் தவரை உணரவைக்க எண்ணினார். அப்போது தண்டிகைப்புலவர் சிலேடைப் பாடக் கோரி தலைப்பு (i mean topic, say, here paampum elumicchaiyum) அளிக்க காளமேகப்புலவர் உடனடியாகப் பாடியவை.

மக்களே !!! என் எழுத்தோ, வரிகளோ புரியவில்லை யென்றாலோ / தவறாக இருந்தாலோ மன்னித்து / கருத்து பரிமாணம் செய்ய தங்களை வேண்டுகிறேன்.

பெரிய விடம் சேரும் பித்தர் முடிஏறும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் - எரிகுணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம் !!



தேன் பொழியும் சோலையுடைய திருமலைராயனின் மலைச்சாரலில் பாம்பும் எழுமிச்சம் பழம் போன்றதாகும்

எப்படியென்று (ஒரே வரிக்கு உள்ள இரு அர்த்தங்களைப்) பார்ப்போம்!!!
பாம்பு:
பெரிய விடம் சேரும் - மிகுதியான விஷம் உடையாதாயிருக்கும்
பித்தர் முடிஏறும் - பித்தனான சிவனின் திருமுடியில் இருக்கும்
அரி யுண்ணும் - காற்றை புசிக்கும் (உண்ணும்)
உப்பும் -அதனால் உடல் உப்பி இருக்கும்
மேலாடும் - மேலாக தலை தூக்கி ஆடும்
எரிகுணமாம் - சினமுடைய குணத்தினை உடையதாயிருக்கும்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம் !!
எலுமிச்சை:

பெரிய விடம் சேரும் - பெரியவர்களிடத்து கொடுக்கப்பட்டு சேர்ந்து இருக்கும் பித்தர் முடிஏறும் - பித்தனின் (சித்த ப்ரம்மை பிடித்தவனின்) தலையில் தேய்க்கப்படும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் - (ஊறுகாய் செய்யும் போது) அரியப்பட்டு உப்பு மேல் தூவப்பட்டிருக்கும்
எரிகுணமாம் - அதன் சாறு பட்டால் எரியக்கூடிய தன்மை கொண்டது !!

தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம் !!

Tuesday, February 21, 2006

காளமேகமாய் சிலேடை!!!

நண்பர்களே!!
வெகுநாட்களுக்குப் பிறகு இங்கு சந்திக்கிறோம்!! இன்னும் இத்தளத்திற்கு வந்து "எதாவது பதிவு உள்ளதா?" எனப் பார்க்கும் நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

ஆத்திசூடிக்குப் பிறகு மற்றொரு நல்ல இலக்கியத்தைப் பற்றியோ (அ) அதற்கு மொழிபெயர்ப்போ செய்ய வேண்டுமென்ற அவா ஒருபுறமிருக்க, ஆராய்ச்சி வேலை மற்றொரு புறம் இழுக்க நான் வேலைக்கு முக்கியத்துவம் த்நதேன்.எழுத வேண்டுமெனற ஆசையை (படிக்காமல்/உழைக்காமல் ) குட்டிப்ரியா தளத்தில் எழுதி தீர்த்துக் கொண்டேன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, சென்ற வாரம், சில நூல்களைப் புரட்டிப் பார்த்தேன். ஆனால், சொந்தமாக மொழிபெயர்க்க நிறைய நேரமும், கடும்உழைப்பும், விடாமுயர்ச்சியும் தேவை என்று உணர்ந்தேன.அது இப்பொழுது முடியாது என்று வருந்திக் கொண்டிருக்க, வாசகர்களுக்கு "நாம் படித்த (அ) படிக்கின்ற சிலவற்றைச் சொல்லலாமே" எனறு தோன்றியது. அதன் விளைவே இந்த (ம) பின்வரும் பதிப்பு (கள்)!!

"கவிஞர்கள் எல்லோரும் மேதாவிகள்!! அவர் போல் (அ) இவர் போல் என்னால் எழுத முடியவில்லையே! முடியவும் முடியாது!!"
- என்னைப பொருத்த வரை இவை சரியான கருத்து - ஆனால் தவறான சிந்தனை!! ஏனெனில் கவிஞன் பிறப்பதில்லை - உருவாக்கப்படுகின்றான் ! காலமும், சூழ்நிலையும், சுற்றுப்புறமும் உதவ ஒரு சராசரி மனிதன் கவிஞனாகின்றான்! கவிஞர்களின் எழுத்துகளில் தனித்துவம் இருப்பதால் தான் ஒவ்வொருவரும் அவரவர் வழிநடையின் மூலம் சிறப்பு பெருகின்றனர். யாரும் மற்றொருவர் போல் எழுத முடியாது!! எழுதவும் தேவையில்லை!!!

கவிஞர் எனறதும் என் நினைவுக்கு வருபவர் பாரதியே !! அவர் பாடல்கள் உண்மையை கக்கும் ; எதார்த்தம் நேரே நெஞ்சில் வேலாய்ப் பாயும் (point blankaa) . அதைக் படித்து, சொல்ல முடியாத இன்பத்தில் பல நாட்கள் திளைத்துள்ளேன்!! அதனால் மற்ற கவிஞர்களின் எழுத்தை ரசிக்காமல் இல்லை..பாரதிதாசனின் பாட்ல்களில் அன்பும் பாசமும் தேனாய்ப்பாயும் விதமும் ஒர் தனி அழகே . மாணிக்கவாசகரின் பாடலோ மனத்தை உருக்கும் பக்தியைக் காட்டும் !!

இப்படி எனக்குப் பிடிதத நிறைய கவிஞர்களில் காளமேகப் புலவரும் ஒருவர். அவரைப் பற்றி நினைத்தாலே அவரின சிந்தனைச்சிறப்பே நினைவுக்கு வருகிறது. தமிழ்ப்புத்தகத்தில் எழாம்-எட்டாம் வ்குப்பில் படித்த "காக்கைக்கா காகூகை" என்ற பாடலினால் சொக்கி இழுக்கப்பட்டு, சுய சம்பாத்தியம் பெற்றதும் அவரின் தனிப்பாடல் நூலை வாங்கிப் படித்தேன். இன்றும் நாளையும் திரும்பப் படிக்கிறேன்.அவ்வளவு புத்துணர்ச்சி அவர் சிந்தனையில் - அவர் சொற்களில்!! . அவருடைய வரலாற்றை உங்களுக்குச் சொல்ல அள்வளாது ஆசை இருப்பினும், அவரின் கவிதைகளைப் பற்றிப் பேச, அதன் சுவையை உங்களுடன் பகிர எண்ணும் ஆசையே விஞ்சி இருக்கிறது!!
அடுத்து வரும் பதிவுகளில் அவருடைய கவிதைகளில் ஒரு வகையான சிலேடைக் கவிதைகளைகளையும் அதன் பொருளையும் பதிக்க எண்ணியுள்ளேன். உங்களின் ஆர்வத்தைத்/எண்ணத்தை தெரிவியுங்கள்!!பிடித்திருந்தால் மேலும் சிலவற்றைக் சொல்ல விரும்புவேன்.(தமிழில் பதிவு செய்வது மிகவும் பொறுமையைக் சோதிக்கின்றது. ஆனால் தமிழில் படித்தால்(/அதுவும் நம் பதிவை தமிழில் படிக்க விரும்புகிறார்கள் என்று அறிந்தால்) ஒரு தனி இன்பம் தான்.

சிலேடை : சொல் அமைப்பில் ஒரு சொல்லாக வந்தாலும் இரண்டு (அ) மூன்று பொருளுடன் விளங்கும் கவிதை சிலேடை எனப்படும் !
காளமேகப்புலவரின் கவிதைகளில் சிலேடை எனக்கு மிகவும் பிடிதத ஒன்று. எனெனில், அது மிக எளிதாகவும் (எல்லொரும் புரிந்துகொள்ளலாம்), அவரின் சிந்தனைச் சிறப்பை விளக்கக் கூடியதாகவும் விளங்கும் (Man!! he has a great thinking capability and he could use it effectively in tamil words .I am so impressed and I respect his intellect..Hats off ).

அடுத்த பதிவில் தான் பாருங்களேன்!!!!

Wednesday, January 25, 2006

ஆத்திசூடி - 17

101. வித்தை விரும்பு
கற்பதிலே ஆர்வம் கொள்வாயாக

102. வீடு பெற நில்
நற்கதி அடையும் காரியங்களைச் செய்வாயாக

103. உத்தமனாய் இரு
உலகத்தவருடன் நல்லவனாக நடந்து கொள்

104. ஊருடன் கூடி வாழ்
ஊர்மக்களுடன் ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துவாயாக

105. வெட்டெனப் பேசேல்
வருத்தம் உண்டாகுமாறு கத்தி வெட்டைப் போல பேசாதே

106. வேண்டி வினை செயேல்
உன் நன்மைக்காக வேண்டுமென்றே தீய காரியங்களைச் செய்யாதே

107. வைகறைத் துயில் எழு
அதிகாலையில் எழுந்திரு

108. ஒன்னாரைத் தேறேல்
பகைவர்களை நம்பாதே

109. ஓரம் சொல்லேல்
நேர்மை தவறி ஒரு பக்கம் பேசாதே!!
முற்றும்

Friday, January 20, 2006

ஆத்திசூடி - 16

91. மீதூண் விரும்பேல்
மிகுதியாக உண்ண விரும்பாதே
92. முனைமுகத்து நில்லேல்
போர்/ சண்டை நடக்கும் இடத்தில் முதலில் சென்று நிற்காதே
93. மூர்க்கரோடு இணங்கேல்
முரடர்களோடு சேராதே
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
உனக்குரிய மனைவியோடு மட்டும் வாழ்க்கை நடத்து
95. மேன்மக்கள் சொல் கேள்
நல்லொழுக்கமுள்ள பெரியாரின் சொல்லைக் கேட்பாயாக
96. மை விழியார் மனை அகல்
விலைமாதர் இல்லத்தை விட்டு நீங்குவாயாக
97. மொழிவது அற மொழி
பேசும் சொற்களை சந்தேகம் இல்லாதவாறு பேசுவாயாக
98. மோகத்தை முனி
காம ஆசைகளை விட்டொழிப்பாயாக

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்
உன்னுடைய ஆற்றலை நீயே புகழ்ந்து பேசாதே

100. வாது முற்கூறேல்
வாக்குவாதம் வருவதற்குரிய சொற்களை நீ முன்னால் பேசாதே
தொடரும்..

Monday, January 16, 2006

ஆத்திசூடி - 15

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
உன்னைப் புகழ்ந்தவரை நீயும் போற்றிவாழ்வாயாக
82. பூமி திருத்தி உண்
நீலத்தை பண்படுத்தி பயிரிட்டு வாழ்வாயாக
83. பெரியாரைத் துணைக் கொள்
அறிவாற்றலில் உன்னைவிட சிறந்தவரைகளையே துணையாகக் கொள்வாயாக
84. பேதைமை அகற்று
அறிவற்ற செயல்களை விட்டொழிப்பாயாக

85. பையலோடு இணங்கேல்
சிறுபிள்ளைத்தனம் உள்ளவர்களோடு இணங்காதே
(project madurai online says 'Dont move with Idiots'. But raamasamy pulavar says 'paiyal' as small children. I think paiyal as people with small qualities )

86. பொருடனைப் போற்றி வாழ்
செல்வம் அழிந்து போகாமல் காத்து வாழ்வாயாக

87. போர்த் தொழில் புரியேல்
போர் புரிவதை ஊக்குவிக்காதே

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்

எத்தகைய நிலையிலும் கலக்கம் அடையாதே

89. மாற்றானுக்கு இடம் கொடேல்
பகைவனுக்கு இடம் அளிக்காதே

90. மிகைபடச் சொல்லேல்
உரையாடும் போது எதையும் மிகைப்படுத்திக் கூறாதே/ குற்றம் உண்டாகுமாறு பேசாதே
தொடரும்

Wednesday, January 11, 2006

ஆத்திசூடி - 14

71. நூல் பல கல்

பல விதமான கலைகளையும் கற்பாயாக

72. நெற்பயிர் விளைவு செய்

நெற்பயிரை பயிரிடுவயாக!

73. நேர்பட ஒழுகு

தவறான வழியிலேயே செல்லாமல் நேர்மையான வழியிலே நடப்பாயாக

74. நைவினை நணுகேல்

உன்னையோ பிறரையோ வருத்தக்கூடிய காரியங்களைச் செய்யாதே

75. நொய்ய உரையேல்

இழிவான மொழிகளைப் பேசாதே

76. நோய்க்கு இடம் கொடேல்

நோயுண்டாவதற்கு இடங்கொடுக்காதே

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்

பிறர் இகழ்ந்துரைக்கத்தக்க மொழிகளைப் பேசாதே

78. பாம்பொடு பழகேல்

பாம்பை வளர்த்து அதனுடன் பழகாதே

79. பிழைபடச் சொல்லேல்

பேசுவதில் குற்றம் உண்டாகுமாறு பேசாதே

80. பீடு பெற நில்

பெருமையுண்டாகுமாறு நல்வழியிலே நடப்பாயாக
தொடரும்..

Monday, January 09, 2006

ஆத்திசூடி - 13

61. தெய்வம் இகழேல்
தெய்வத்தை இழிவாகப் பேசுதல் கூடாது

62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
உன்னுடைய நாட்டு மக்களோடு ஒற்றூமையாக வாழ்வாயாக !
63. தையல் சொல் கேளேல்.
பெண்களின் தீய சொற்களைக் கேட்டு நடக்காதே !

64. தொன்மை மறவேல்.
பழமையான ந்ட்பு, உறவு முதலியவைக்ளை மறந்து விடாதே

65. தோற்பன தொடரேல்.

முடிக்கமுடியாத காரியங்களைத் தொடங்காதே
நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி
நன்மையான காரியங்களைத் தொடர்ந்து செய்வாயாக

67. நாடு ஒப்பன செய்
உன்னுடைய நாட்டிலுள்ளோர் ஒத்துக்கொள்ளக் கூடிய காரியங்களையே செய்.

68. நிலையில் பிரியேல்.
உன்னுடைய கொள்கைகளில் இருந்து பின்வாங்காதே
69. நீர் விளையாடேல்.
தண்ணீரிலே விளையாதே

70. நுண்மை நுகரேல்
(நோய் உண்டாக்கத்தக்க) இழிவு பொருளை உண்ணாதே!
தொடரும்..

Tuesday, December 20, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்...உள்ளப்படா

உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:
மனத்தினால் இதுதான் என்று உருவகப்படுத்த இயலாத திருவுருவத்தை நினைத்தலும், களங்கமில்லாத மகிழ்ச்சி உண்டாக்கத்தக்க மேலான கருணை அருள் வெள்ளத்தையுடைய பெருமான, எம் இறைவன் அடியேனை தனியாக ஆட் கொண்டார் - அந்த இறைவனிடத்திலேயே போய் ஊதுவாய் அரச வண்டே!

பதவுரை :

உள்ளப்படாத - மனத்தினால் இதுதான் என்று உருவகப்படுத்த இயலாத,

திருவுருவை - திருவுருவத்தை.

உள்ளுதலும் - நினைத்தலும்

கள்ளப்படாத - களங்கமில்லாத

களிவந்த - மகிழ்ச்சி உண்டாக்கத்தக்க

வான்கருணை - மேலான கருணை

வெள்ளப் பிரான் - அருள் வெள்ளத்தையுடைய பெருமான்

எம்பிரான் - எம் இறைவன்

என்னை - அடியேனை

வேறே - தனியாக

ஆட்கொள் - அடிமைகொண்ட

அப்பிரானுக்கு - அந்த இறைவனிடத்திலேயே

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை:

இந்த பாடலின் மூலம் 'இறைவனை நினைத்தாலே போதும். அவன் தன் களங்கமில்லாத அருட் கருணையினால் நம்மை எற்றுக் கொள்வார்' என்று சொல்கிறார்.

Wednesday, November 30, 2005

திருவாசகம்..பூ ஏறு கோனும்...நாயேனைத்

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச
சீயேனும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

தெளிவுரை
நாய் போன்ற பரிதாபத்துக்குரியவனான என்னை தன்னுடைய திருவடிகளைப் பாடும்படி செய்த இறைவனும்,பேய்த்தன்மை யுடையவனான என் மனக்குற்றங்களை மன்னிக்கும் பெருமையுடையவனும்,சிறிதளவும் இல்லாத யான் செய்யும் தொண்டுகளை ஏற்றருள்கின்ற தாயானவனுமாகிய இறைவனிடமே போய் ஊதுவாயாக அரச வண்டே!

பதவுரை
நாயேனை - நாய் போன்ற பரிதாபத்துக்குரியவனான என்னை
தன் அடிகள் -( pope says 'jewelled feet' but i cant make out how it means so. if u know let me know) தன்னுடைய திருவடிகளைப்
பாடுவித்த - பாடும்படி செய்த
நாயகனை - இறைவனும்
பேயேனத் - பேய்த்தன்மை யுடையவனான ( கெட்டவைகள்) என்
உள்ளப் பிழை பொறுக்கும் - மனக்குற்றங்களை மன்னிக்கும்
பெருமையனை - பெருமையுடையவனும்
சீ ஏதும் இல்லாது - சிறிதளவும் இல்லாத
என் செய் பணிகள் கொண்டருளும் - யான் செய்யும் தொண்டுகளை ஏற்றருள்கின்ற
தாயான ஈசற்கே - தாயானவனுமாகிய இறைவனிடமே
சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக
கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை
இறைவன் அடியார்களைத் தன்னைப் பாடும் பணியிலே நிற்கச்செய்து அருள் புரிகின்றான் என்பது ‘நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகன்’ என்பதனால் விளங்குகிறது. தாயானவள் சேயினது குற்றத்தைப் பொறுத்துப் பரிவும் காட்டுவாளாதலின், இறைவனை ‘தாயான ஈசன்’ என்றார். இதனால், பாடும் பணி இறைவனுக்கு மிகவும் உவகையைத் தருவது என்பதை அறியலாம்.

Wednesday, November 23, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்.. நானும்

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

தெளிவுரை:
தானும் தன் தேவியான தையல்நாயகியுடன் நீண்ட சடையையுடைய சிவபெருமான் எம்மை ஆட்கொள்ளவில்லையாயின் நானும் எனது உள்ளமும் தலைவனாகிய அவனுக்கு எவ்வளவு தூரத்தில் இருப்போம். ஆகாயமும் திக்குகளும் பெரிய கடல்களும் ஆகிய பெருமானது தேன் ஊரும் திருவடிகளிடத்தே போய் ஊதுவாய், அரச வண்டே!

பதவுரை:

நானும் - யானும்

என் சிந்தையும் - எனது உள்ளமும்

நாயகனுக்கு - தலைவனாகிய அவனுக்கு

எவ்விடத்தோம் - எந்த இடத்தில் இருப்போம் ( எவ்வளவு தூரத்தில்
இருப்போம் )

தானும் தன் தையலும் - தானும் தன் தேவியான தையல்நாயகி

தாழ்சடையோன் - நீண்ட சடையையுடைய சிவபெருமான்

ஆண்டிலனேல் - ஆட்கொள்ளவில்லையாயின்

வானும் - ஆகாயமும்

திசைகளும் - திக்குகளும்

மாகடலும் - பெரிய கடல்களும்

ஆயபிரான் - ஆகிய பெருமானது

தேன் உந்து - தேனைச் சொரிகின்ற

சேவடிக்கே - திருவடிகளிடத்தே

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை :

இறைவனே தம்மை ஆட்கொள்ளவில்லையென்றால் தாமும் தம் சிந்தையும் எங்கேயோ இருந்திருக்கும் என்று கூறுகிறார். தையலும் என்பது தையல்நாயகி - வைதீஸ்வரன் கோவில் அம்பாளைக் குறிக்கின்றது.

Saturday, November 19, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்.. வைத்தநிதி

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்விஎன்னும
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ
சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:

ஈட்டி வைத்த செல்வம், மனைவியர் ,புதல்வர், குலம், கல்வி ஆகிய இவையே வாழ்க்கையென்று நம்புகின்ற மாயையில் உள்ள இவ்வுலகத்தில், பிறப்பு இறப்பு என்கின்ற மனோவிகாரத்தால் உண்டாகும் குழப்பத்தை போக்கிய செறிந்த ஞானமுள்ள பரம்பொருளிடம் போய் ஊதுவாய் அரச வண்டே!

பதவுரை:

வைத்த நிதி - ஈட்டி வைத்த செல்வம்

பெண்டிர் - மனைவியர்

மக்கள் - புதல்வர்

குலம் - குலம்

கல்வி - கல்வி

என்னும் - ஆகிய இவையே வாழ்க்கையென்று நம்புகின்ற

பித்த உலகில் - மாயையில் உள்ள இவ்வுலகத்தில்

பிறப்பொடு இறப்பு என்னும் - பிறப்பு இறப்பு என்கின்ற

சித்த விகாரக் கலக்கம் - மனோவிகாரத்தால் உண்டாகும் குழப்பத்தை (Mentally changing state)

தெளிவித்த - போக்கிய

வித்தகத் தேவற்கே - செறிந்த ஞானமுள்ள (wisdom) பரம்பொருள் (mighty Lord)

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை:

நிலையில்லாத பொருள்களாகிய நிதி முதலியவற்றை நிலையுடையது என்று எண்ணும் அறிவு பேதைமையாதலால், இவ்வுலகை ‘பித்த உலகு’ என்றார்.

இறைவன் இவ்வறியாமையைப் போக்கி அறிவை வழங்குவாராதலால் ‘சித்த விகாரம் தெளிவித்த வித்தகத் தேவர்’ என்றார்.

வித்தகத்தேவர் என்ற வார்த்தைப் ப்ரயோகம் மிக அருமையாக இறைவனின் சிறப்பை விளக்குகிறது!!

தொடரும்..

Wednesday, November 09, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்..கண்ணப்பன்

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருள
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:
கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு என்னிடத்தில் இல்லாமை அறிந்தும் என் தந்தையான ஈசன் எதனோடும் ஒப்பில்லாத என்னையும் அடிமையாகக் கொண்டருளி இவ்வண்ண்ம் செய் என்று (நான் செய்ய வேண்டியதைத்) தெரிவித்து என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய மேலாகிய கருணையையுடைய பொடியாக / மின்னுகின்ற அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே போய் ஊதுவாயாக! அரச வண்டே!

பதவுரை :

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு - கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு

இன்மை கண்டபின் - என்னிடத்தில் இல்லாமை அறிந்தும்

என் அப்பன் - என் தந்தையான ஈசன்

என் ஒப்பில் - எதனோடும் ஒப்பில்லாத

என்னையும் ஆட்கொண்டருளி - என்னையும் அடிமையாகக் கொண்டருளி

வண்ணம் பணித்து - இவ்வண்ண்ம் செய் என்று (நான் செய்ய வேண்டியதைத்) தெரிவித்து

என்னை வாவென்ற - என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய

வான் கருணை - மேலாகிய கருணையையுடைய

சுண்ணம் - பொடியாக / மின்னுகின்ற

பொன் நீற்றற்கே - அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக!

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை :

Thanks to wiki books!!

கண்ணப்பர் அன்பு காட்டியது :
தொண்டை நன்னாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் வேடர் குலத்தில் தோன்றியவர் கண்ணப்பர். இவரது இயற்பெயர் திண்ணனார். பருவம் வந்ததும் வேட்டையாடும்பொருட்டுச் சென்றவர் காளத்தி மலை அடிவாரத்தை அடைந்தார்; துணைவன் நாணானால் குடுமித் தேவர் அம்மலைமீதுள்ளார் என உணர்ந்தார்.
முன்னைத் தவப்பயனால் மலைமீதேறிப் பெருமானைக் கண்டார்; அன்பு கொண்டார்; இலிங்கத்தின்மேல் பூவும் பச்சிலையும் இருக்கக் கண்டு, அவற்றை அந்தணர் ஒருவர் சார்த்தி வழிபட்ட முறையை நாணன் கூறக் கேட்டார். பின்பு வாயாகிய கலசத்தில் நீரை முகந்துகொண்டும், பூவும் பச்சிலையும் பறித்துத் தலையில் வைத்துக்கொண்டும், வேட்டையாடிய இறைச்சியாகிய உணவைத் தேடிக் கொண்டுவந்தும், இலிங்கத்தின்மீதிருந்த பூ முதலியவற்றைத் தம் செருப்புக்காலால் நீக்கி, தாம் கொணர்ந்த நீரை உமிழ்ந்து பூவையும் இலையையும் சொரிந்து, ஊனமுதை இட்டு வழிபட்டார்; இங்ஙனம் ஐந்து நாள்கள் வழிபாடாற்றினார். இதைக் கண்டு மனம் பொறாது வருந்திய சிவகோசரியாருக்குத் திண்ணனாரின் அன்பைப் புலப்படுத்த எண்ணிய இறைவன், ஆறாம் நாள் தன் கண்ணில் உதிரம் சொரியச் செய்தான். இதைக் கண்ட திண்ணனார் துடிதுடித்துத் தம் கண்ணையே இடந்து அப்பினார். இறைவனது மற்றொரு கண்ணிலும் உதிரம் வரக் கண்டு தமது மற்றொரு கண்ணையும் அம்பினால் தோண்டும் போது இறைவன், ‘நில்லு கண்ணப்ப’ எனத் தடுத்து நாயனாரின் அன்பை வெளிப்படுத்தினான்.

Friday, November 04, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்..தினைத்தனை

தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும
அனைத்தெலும்பும் உள்நெக ஆனந்தத் தேன்சொரியுங
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:
தினையளவாய் இருக்கின்ற மலரிலுள்ள தேனைப் பருகாமல், நினைக்குந்தோறும், காணுந்தொறும், சொல்லுந்தொறும் எக் காலத்தும், எல்லா எலும்புகளும் உள்ளே நெகிழும்படி பேரின்பத் தேனைப் பொழியும் கூத்துடைய பெருமானிடத்திலேயே போய் ஊதுவாயாக அரச வண்டே!

பதவுரை:
தினைத்தனை உள்ளது - தினையளவாய் (Denoting small seed/ also called as italian millet) இருக்கின்ற

ஓர் பூவினில் தேன் உண்ணாது - மலரிலுள்ள தேனைப் பருகாமல்,

நினைத்தொறும் - நினைக்குந்தோறும்

காண்தொறும் - காணுந்தொறும்

பேசுந்தொறும் - சொல்லுந்தொறும்

எப்போதும் - எக் காலத்தும்

அனைத்து எலும்பும் - எல்லா எலும்புகளும்

உள்நெக - உள்ளே நெகிழும்படி

ஆனந்தத் தேன் சொரியும் - பேரின்பத் தேனைப் பொழியும்

குனிப்புடையானுக்கே - கூத்துடைய பெருமானிடத்திலேயே (wiki book says so)

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை: பூவிலுள்ள தேனைத் ‘தினையளவு’ என்றும், இறைவனது கூத்தினை, ‘தேன்மழை’ என்றும் அதனால் வண்டே ! அங்கே சென்று ஊதுவாயாக என்று கூறுவதால் ‘இறையின்பம் அளவற்றது’ என்பதை நமக்கு எடுத்துக் கூறுகிறார்.

'நினைக்குந்தோறும், காணுந்தொறும், சொல்லுந்தொறும் எக் காலத்தும் எல்லா எலும்புகளும் உள்ளே நெகிழும்படி பேரின்பத் தேனைப் பொழியும்' என்று கூறி நமது உள்ளத்தை நெகிழ வைக்கிறார் மாணிக்கவாசகர்.

Friday, October 21, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்..நானார்

2. நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள்:
நான் ஆர் - நான் என்ன தன்மையுடையவன்?
என் உள்ளமார் ஞானங்கள் ஆர் - என் உள்ளத்தில் நிறைந்த ஞான அறிவு (Wisdom's lessons) என்ன?
என்னை யார் அறிவார் - என்னை யார் அறிந்து கொள்வார் ?
மதி மயங்கி - பேரருள் காரணமாக மனமிரங்கி
வானோர் பிரான் - தேவர்களின் பெருமான் (சிவன்)
என்னை ஆண்டிலனேல் - என்னை ஆட்கொள்ளாவிடில்!!!
ஊன் ஆர் உடைதலையில் - மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்பலி தேர் -(உண்பலித்து + ஏர்) உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற, அம்பலவன் - அம்பலவாணனது
தேன் ஆர் கமலமே - தேன் ஊறிய தாமரை போன்ற திருவடியின்கண்ணே
சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக
கோத்தும்பீ - அரச வண்டே!

தெளிவுரை: நான் என்ன தன்மையுடையவன்?, என் உள்ளத்தில் நிறைந்த ஞான அறிவு என்ன? என்னை யார் அறிந்து கொள்வார் ? பேரருள் காரணமாக மனமிரங்கி, தேவர்களின் பெருமான் (சிவன்), என்னை ஆட்கொள்ளாவிடில்!!!மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற அம்பலவாணனது தேன் நிறைந்த தாமரை போன்ற திருவடியின்கண்ணே போய் ஊதுவாயாக!! அரச வண்டே!

விளக்கவுரை: 'இறைவன் ஆட்கொண்டமையால் தான் தம்மை தாமே அறிந்து கொள்ள முடிந்தது' என்றும் 'தான் அதனால் பெற்ற ஞானமும் வெளிப்பட்டது' என்றும் கூறுகிறார் மாணிக்கவாசகர். கடவுள், பேரருள் காரணமாக மனமிரங்கி தன்னை ஆட்கொண்டார். அதன் மூலம் தான் அடைந்த ஞானம் வெளிப்பட்டது என்றும் மாணிக்கவாசகர் கூறுவதால் அவரின் வினயமும் இங்கு வெளிப்படுகிறது. 'மதி மயங்கி வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்' என்று படித்தால் பொருள் சால சிறப்பாக அமையும்!!

தேன் ஆர் கமலமே - தேன் ஊறிய தாமரை போன்ற திருவடியின்கண்ணே என்பதன் மூலம் அவர் திருவடி அவ்வளவு இனிமையாக இருக்கும் என்கிறார். தேனார் கமலமே- பண்பு ஆகுபெயர்.

ஆகுபெயர்:- ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அதனொடு தொடர்புடைய பொருளைக் குறிப்பது ஆகுபெயர் ஆகும். இந்த ஆகுபெயர் 19 வகைப்படும். பெரும்பாலும் வழக்கில் பயன்படுத்தப்படுபவை பொருளாகுபெயர் (thing) , இடவாகுபெயர் (place), பண்பாகுபெயர் (quality) , உவமையாகுபெயர் (comparison) , தானியாகுபெயர் (dont remember!!!)

eg:
தாமரை சேவடி - தாமரை போன்ற மென்மையான சேவடி - lotus like softness - பண்பு ஆகுபெயர்
வெள்ளை அடித்தான் - வெண்மையான சுண்ணம் குறிக்கிறது - white denoting sunnaambu - பொருள் ஆகுபெயர்
பாவை வந்தாள் - சிலைபோன்ற பெண்ணைக் குறிக்கிறது - art like beautiful girl - உவமை ஆகுபெயர்

Thursday, October 13, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்...

திருக்கோத்தும்பி - தில்லையில் அருளிச் செய்தது

கோத்தும்பி என்பது அரச வண்டு என்று பொருள்படும். அரச வண்டை அழைத்து, ‘இறைவன் திருவடிக்கமலத்தில் சென்று ஊதுவாய்’ என்று கூறுவது போலப் பாடப்பட்டுள்ளது இப்பகுதி.

Pope's explanation on Kothumbi: Our poet-sage, like S. Anthony of Padua, and some other medieval saints, had a great sympathy with the irrational creation. This poem is addressed to the humming bee, or winged beetles, which abound in all the topes and glads of South India, and are especially numerous in the shady groves that surround the temples;having a great preference for the fragrant and beautiful trees which are sacred to the Hindu deities. The insect, here called Kottumbi, is probably the dragon-fly Ruplea Spenders. Here the SOUL is really addressed and exhorted to seek Civa's feet.

1.
பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைநத
நாயேறு செல்வியும் நாரணனும் நான்மறையும
மாயேறு சோதியும் வானவருந் தாமறியாச
சேயேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:
தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரம்மனும், இந்திரனும், அழகு/ஜொலிப்பு கொண்ட கற்றவர்களின் நாவின் மேல் அமர்ந்துள்ள சரஸ்வதியும், நாராயணனும், நான்கு வேதங்களும், சிறப்பு மிகுந்த ஓளி வடிவும் , வானவர்களும் தாம் அறியமுடியாத, ரிஷப (இடப) வாகனத்தில் ஏறும் சிவபெருமானின் திருவடியின்கண் சென்று ஊதுவாய், அரச வண்டே !!

பதவரை:
பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரம்மனும்,
புரந்தரனும் - இந்திரனும்,
பொற்பு அமைந்த - அழகு/ஜொலிப்பு அமைந்த,
நா ஏறு செல்வியும் -கற்றவர்களின் நாவின் மேல் அமர்ந்துள்ள சரஸ்வதியும், நாரணனும் - திருமாலும்,
நான்மறையும் - நான்கு வேதங்களும்,
மா -பெருமை
வேறு சோதியும் - மிகுந்த ஒளி வடிவும்/ wiki books says வடிவினனாகிய உருத்திரனும்,
வானவரும் - தேவர்களும்,
தாம் அறியா - தாம் அறியாவொண்ணாத,
சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய திருவடிக் கண்ணே,
சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக
கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை:
தாமரைப்பூவின் மேல் அமர்ந்துள்ள அரசன் போன்றவன் ப்ரம்மா.

நாயேறு செல்வி-அறிவில் சிறந்தவர்கள் தங்கள் சிறப்பை பேசும் வார்த்தைகளில் வெளிப்படுத்துவர். அவ்வார்த்தைகள் நம் நுணி நாக்கு மேல் அன்னத்தைத்(roof of the mouth) தொடும்போதே வரும். அறிவிற்கு அதிபதியான சரஸ்வதி அத்தகைய சிறந்தவர்களின் நுணிநாக்கின் மேல் ஏறி அமருவாள் என்பதைக் குறிக்கும் வண்ணன் உள்ளது என்று நான் கருதுகிறேன்.

மாயேறு சோதி - மிகுந்த ஒளி வடிவும்/ wiki books says வடிவினனாகிய உருத்திரனும் (Rudra is a form thought to be God of Power. May be thats why they refer Jothi/power to Rudra..But I never understood so until I crosschecked my interpretation with their's.

சேவடிக்கு+ஏ என்பதை சேவடியின் கண் என்று மாற்றிக் கொள்க. (4ஆம் வேற்றுமை உருபு 7ஆம் உருபாக மாற்றிக் கொள்க)

( வேற்றுமை உருபு பற்றி படித்தது நினைவுக்கு வருகிறதா !!!அதாவது ஒரு சொல் இயல்பாக இல்லாமல் பொருள்படுவதற்காக மாறுபட்டு ஒரு உருபைச் சேர்த்து வரும் . அதுவே வேற்றுமை உருபு ஆகும்.

ஐ - 2ஆம் வேற்றுமை உறுபு eg: இராமனைக் கண்டேன்
ஆல் - 3ஆம் '' eg: இராமனால் ..
கு - 4ஆம் '' eg: இராமனுக்கு..
இன் - 5ஆம் '' eg: இராமனின்..
அது - 6ஆம் '' eg:இராமனது..
கண் - 7ஆம் '' eg: இராமனின் கண் ..)

MAANIKKAVASAGAR learned english I guess,,, adhaan avar "senrroodhai 'GO'thumbi"nnu paaditaaro..Just kidding :)

Wednesday, October 12, 2005

ஆத்திசூடி - 12


56. தானமது விரும்பு

தானம் கொடுப்பதற்கு விருப்பங்கொள்வாயாக!!!

57. திருமாலுக்கு அடிமை செய்

காத்தற் கடவுளாகிய திருமாலிடம் அன்புடன் சேவை செய்!!

58. தீவினை அகற்று

தீய செயல்களைச் செய்யாதே!!

59. துன்பத்திற்கு இடம் கொடேல்

துன்பம் வரக்கூடிய செயல்களைத் தவிர்ப்பாயாக!!

60. தூக்கி வினை செய்

செய்யும் காரியத்தின் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து அதனைச் செய்வாயாக!!

தொடரும்..