Thursday, February 08, 2007

காளமேகமாய் சிலேடை- பூசணிக்காயும் பரமசிவனும்

காளமேகப் புலவரைப் பற்றி ப்ரபுவின் அருமையான பதிவைப் பாருங்கள்!!

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!!

பூசணிக்காயானது :

அடி நந்தி சேர்தலால் - அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்
ஆகம் வெளுத்துத் - உடல் வெளுத்து
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
வடிவுடைய மாசுணத்தை பூண்டு - அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் - வளைவான் தழும்புகளை மேல் கொண்டதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! - பூசணிக்காயையும் ஈசனாகக் கருதிப் போற்றுவாயாக !!

சிவபெருமான் :

அடிநந்தி சேர்தலால் - திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்
ஆகம் வெளுத்துத் - திருநீறணிந்து உடல் வெண்மையையாய் இருப்பதாலும்
வடிவுடைய கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தில் பூங்கொடியாய உமையைக் கொண்டு
மாசுணத்தை பூண்டு - சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் -தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர் சிவபெருமான்.

தொடரும்..